tamilnadu

img

எம்.ஆர்.எப் நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு, ஆலை தொழிலாளர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு ஆர்ப்பாட்டம்

எம்.ஆர்.எப் நிர்வாகத்தை கண்டித்து  சிஐடியு, ஆலை தொழிலாளர் சங்க  கூட்டு நடவடிக்கைக் குழு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக். 27-  பெரம்பலூர் எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலையில், சுமார் 790-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த ஊதிய ஒப்பந்தமானது 31.12.2023 உடன் முடிவடைந்து விட்டது. புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை 01.01.2024 முதல் அமல்படுத்த வேண்டும். ஆனால் நிர்வாகமானது கடந்த 22 மாதங்களாக ஊதிய ஒப்பந்தத்தினை அமல்படுத்தாமல், அலட்சியமாகவும் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலதாமதம் செய்வதையே கையாண்டு வருகிறது.  இதனால் சுமார் 790-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஊதிய உயர்வு ஒப்பந்தம் சம்பந்தமாக தொழிற்சங்கம், நிர்வாகத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து, தொழிற்சங்கம் ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவு பெறாதையொட்டி, துறை சார்ந்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும் 16.6.2025 மற்றும் 14.8.2025, 15.10.2025 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டத்தின் பேரில் திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் முன்பு, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.  மேலும் 29.9.2025 அன்று, பெரம்பலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வருவாய் வட்டாட்சியர் மற்றும் தொழிலாளர் துறை உதவி ஆணையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 10.10.2025 அன்றைய தினத்தில் தொழிற்சங்கம் வைத்த அனைத்து கோரிக்கைகளும் திருச்சி தொழிலாளர் ஆணையர் முன்பு நிறைவேற்றப்படும் என்று பேச்சுவார்த்தையில் எம்.ஆர்.எப் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. ஆனால் 10.10.2025 அன்று தொழிலாளர் துறை ஆணையர் முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் படி எம்.ஆர்.எப்  நிர்வாகம் எந்த ஒரு முடிவும் தெரிவிக்கவில்லை.  ஆகையால், நிர்வாகம் மெத்தனப்போக்கை கைவிடவும், கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் தொழிற்சங்கம் சார்பாக இரண்டு கட்டமாக பெரம்பலூர் மற்றும் பாடாலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், எம்.ஆர்.எப் ஆலை தொழிலாளர்களுக்கு 22 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்காமல் காலம் தாழ்த்தும் நடவடிக்கையை கைவிட்டு, உடனடியாக நிலுவைத் தொகையுடன் வழங்கிட கோரியும், தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையை கைவிடக் கோரியும், தொழிலாளர் சட்டங்களுக்கு புறம்பாக செயல்படும் எம்.ஆர்.எப் ஆலையின் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்கக் கோரியும், கருப்பு பேட்ச் அணிந்து சனிக்கிழமை முதல், உணவு புறக்கணிப்பு செய்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.  எம்.ஆர்.எப் நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு மற்றும் எம்.ஆர்.எப்.ஆலை தொழிலாளர் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.