-கோவி.பால.முருகு
மூடப் பழக்கத்தை விட்டிடு! -அதை
முளையி லேயே வெட்டிடு!
இல்லாத ஒன்றைத் தேடாதே!-அது
இருப்பதாய்ச் சொல்வதைக் கேளாதே!
ஆவிகள் என்பது பொய்யே!-பேய்
தாவிடும் கதையும் பொய்யே!!
பில்லி சூனியம் பொய்யே!-மூடர்
சொல்லிடும் கற்பனைப் பொய்யே!
ஞானம் என்றால் அறிவு!-இது
ஞானிகள் பெற்ற செறிவு!
ஊனம் இல்லா அறிவு!-அது
உணர்த்திடும் பகுத்த அறிவு!
கண்மூடி எதையும் ஏற்காய்-அதைக்
கண்டு ஆய்ந்து அறிவாய்!
மண்ணிலே ஒழியட்டும் புராணம்!-அதில்
உண்மை இல்லாக் காரணம்!
கதைகள் பற்பலச் சொல்லுவார்!-அதைக்
கலக வேராய்க் கொள்ளுவார்!
விதைப்பார் மதவெறி மூண்டிட!-தீமை
விளைந்திடும் நாடு கெட்டிட!
கடவுளர் கதைகள் கற்பனை!-அது
காசு பறித்திடும் விற்பனை!
மூடம் நிறைந்த ஆபாசம்! -அது
முற்றிலும் பொய்தரும் மோசம்!
வேதம் ஆகமம் புராணம் !-நாட்டில்
வேண்டாம் என்றார் வள்ளலார்!
மதமும் சாதியும் வெறுத்திடு!-நீ
மனித நேயம் கொண்டிடு!