tamilnadu

மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்! முதலமைச்சருக்கு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை

மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்! முதலமைச்சருக்கு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை

சென்னை, ஜன. 30 - மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டுமென்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (CITU) கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எம்.சிவாஜி முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2013 ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட மீட்டர் கட்டணம்தான் தற்போது வரை அமலில் உள்ளது. திமுக அரசாங்கம் பொறுப்பேற்ற பின் மீட்டர் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆட்டோ செயலி உருவாக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இன்னும் அமலாக்கப்படாமல் உள்ளது. ஆட்டோ மீட்டர் கட்டணம் அமலாக்கம், ஆட்டோ செயலி செயலாக்கம் குறித்து போக்குவரத்து ஆணையர் 3 கூட்டமும், போக்குவரத்து துறை அமைச்சர் 2 கூட்டமும் நடத்திய பிறகும், மீட்டர் கட்டண மாற்றம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பெரிய அளவிலான நிதிச்சுமை இல்லாத இந்த திட்டங்களை அறிவிப்பு செய்து அமல்படுத்துவதில் அரசுக்கு சிரமம் இல்லை. போராட்டங்கள் அறிவிக்கப்படும் போதெல்லாம், ஒரிரு மாதங்களில் அறிவிப்பை வெளியிடுவோம் என்று கூறுகின்றனர். ஆனால், அது நடக்கவில்லை.  எனவே, இப்போதாவது, மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைத்து அறிவிப்பு செய்வதோடு, அதற்கான ஆட்டோ செயலியையும் செயல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 24 அன்று மாநிலம் முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டமும், சென்னையில் போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தையும் நடத்த உள்ளோம். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.