உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்துக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. உள்ளாட்சி அதிகாரம் முழுவதும் கையில் வைத்து கொண்டு உள்ளாட்சி துறை அமைச்சர் ஒட்டுமொத்தமாக வியாபாரம் செய்து கொண்டிருக்கும் நிலைதான் உள்ளது. கிராமப்புற மக்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதாரமாக இருந்த 100 நாள் வேலைத்திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்தவில்லை. முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்து கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு செல்ல என்ன செய்யலாம் என ஒரு ஆய்வு செய்தனர். அந்த குழுவிடம் கிராமப்புறங்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் போன்று, நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தோம். அந்த குழு அதை ஏற்றுக்கொண்டு அரசுக்கு பரிந்துரைத்தது.பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு எந்த வேலைவாய்ப்பு திட்டமும் இந்த அரசிடம் கிடையாது. நகர்புறத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களை செயல்படுத்துங்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்த தயாராக இல்லை.
நாகர்கோவிலில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியிலிருந்து...