tamilnadu

img

லடாக்கில் பலியான ராணுவ வீரர் பழனி உடலுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்ட ஆட்சியர்கள் அஞ்சலி

மதுரை:
சீன ராணுவத்தின் தாக்குதலால் மரண மடைந்த ராணுவ வீரர் பழனி உடல், அவரது சொந்த ஊரில் வியாழனன்று அடக்கம் செய்யப்பட்டது.

லடாக் எல்லையில் உள்ள கல்வான்  பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய, சீன ராணுவத்தின ரிடையே  மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகஇந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவர்களில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனியும் ஒருவர். பழனியின் உடல், ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு புதன் இரவு 11.30 மணியளவில் வந்தடைந்தது. மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தினர். 

பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடுக்கலூர் கொண்டு செல்லப்பட்டது.வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் கிராம எல்லையில் இருந்து சுமார் இரண்டு கி.மீ தூரத்திற்கு ராணுவ வாகனத்தில் மாற்றப்பட்டு ராணுவ மரியாதையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. தேசியக் கொடி போர்த்திய பழனியின் உடலைப்பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு இராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் ஆறுதல் கூறினார். பழனியின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.  முன்னதாக தமிழக அரசு வழங்கிய ரூ.20 லட்சம் நிவாரணத்திற்கான காசோலையை ஆட்சியர் பழனியின் மனைவியிடம் வழங்கினார். பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தனது சொந்த நிதியிலிருந்து  ரூ.1லட்சம், திமுக மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கட்சி நிதி யிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கினார். பழனியின் உடலுக்கு இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் கா.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முத்துராமு, தாலுகாகுழு உறுப்பினர் நாகநாதன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்,

பழனியின் தந்தை காளிமுத்து கூறுகையில், “எனது மகன் வீர மரணம் அடைந்துள்ளார். அவரது சேவையை, தியாகத்தை பாராட்டும் வகையில் திருவாடானை அரசுக் கல்லூரி அல்லது அரசு மேல்நிலை பள்ளிக்கு அவரது பெயரை வைக்க வேண்டும்” என்றார்.மறைந்த பழனிக்கு வானதி தேவி என்ற மனைவியும் பிரசன்னா, திவ்யா ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.