tamilnadu

கள்ளசாராயத்தை எதிர்த்த இரு மாணவர்கள் படுகொலை

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. கள்ளச்சாராய வியாபாரிகளால் இரு கல்லூரி மாணவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.கார்த்திக் மற்றும் மாநில செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராய வியாபாரிகளான தங்கதுரை, ராஜ்குமார் மற்றும் முவேந்தன் ஆகியோர் சக்தி, சக்திஹரிஷ் எனும் இரு மாணவர்களை கொலை செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு காவல்துறையின் அலட்சியமே காரணம் என சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 8 முறை புகார் அளிக்கப்பட்டும், கள்ளச்சாராய வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு பெரம்பூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் நடவடிக்கை எடுக்காததே இந்த படுகொலைக்கு காரணம் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. முன்னதாக வாலிபர் சங்கம் நடத்திய போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தின் போதும், கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போதும் கள்ளச்சாராய வியாபாரிகள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.