இந்தியாவில் நிகழும் குழந்தைகள் இறப்பில் 70 சதவீதத் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளின் தரவுகள் பிரிவின் துணை ஆசிரியரும் ஆராய்ச்சியாளருமான ஹன்னா ரிச்சி செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம்:-
உலகளவில் 2021-ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட 47 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர். அவர்களில் 24 லட்சம் குழந்தைகள் தாயின் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் காரணமாக இறந்துள்ளனர். அதாவது குழந்தை இறப்புகளில் பாதி ஊட்டச்சத்துக் குறைபாட்டால் நிகழ்ந்துள்ளது. இந்த மரணங்களைப் பற்றி நாம் யோசித்தால், “பசி எவ்வளவு கொடுமையானது” என்பதை அறிந்துகொள்ள முடியும். இத்தகைய மரணங்கள் பஞ்சத்தின் போதோ அல்லது மிகக் குறைந்த அளவு உணவு கிடைக்கும் பகுதிகளிலோ நிகழ்ந்திருக்கலாம் என்றாலும் கூட, ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புடைய மொத்த இறப்புகளில் இது ஒரு சிறு பகுதி மட்டுமே. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கவில்லை.
அவர்கள் மிக மோசமான வறுமையாலோ அல்லது அதனால் ஏற்படும் நிலைமைகளாலோ இறக்கின்றனர். குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் தான் அதிகளவில் இறக்கின்றன என்பது தான் வேதனையான விஷயம். குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் இறப்புக்குப் பிரதான காரணம் தாய்க்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காதது தான். 500 கிராம் எடைக்கும் குறைவாக பிறக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிர்வாழும் வாய்ப்பு மிகவும் குறைவு. எடைகுறைவால் ஏற்படும் பிரச்சனைகள்: இந்தக் குழந்தைகள் பிறக்கும் போது ஆக்ஜிசன் அளவு குறைவாக இருக்கும். உணவு மற்றும் எடை அதிகரிப்பதில் சிக்கல். சுவாசப் பிரச்சனைகள் மற்றும் முதிர்ச்சியடையாத நுரையீரல் (குழந்தைக்கு சுவாசக் கோளாறு பிரச்சனை), மூளைக்குள் இரத்தப்போக்கு ஏற்படுவது உள்ளிட்ட நரம்பு மண்டலப் பிரச்சனைகள், குடல் அழற்சி-செரிமானப் பிரச்சனைகள், (நெக்ரோடைசிங் எண்ட்ரோகோலிடிஸ்) போன்ற செரிமான பிரச்சனைகள், தோல் அல்லது கண்கள் மஞ்சள் நிறமாகக் காணப்படும் (மஞ்சள் காமாலை),
முன்கூட்டிய விழித்திரை சரியாக வளர்ச்சியடையாத (ரெட்டினோபதி நிலை). குறிப்பாக குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது, அங்கு குழந்தைகளுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. தவிர தொற்று நோய்களும் ஒரு காரணமாக உள்ளது. கடந்த சில பத்தாண்டுகளில் சுத்தமான குடி நீர், சுகாதாரம் ஆகியவை மேம்பட்டுள்ளது. கை கழுவுதல் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வயிற்றுப்போக்கு, மலேரியா, காசநோய்க்கு போதுமான எதிர்ப்பு மருந்துகள் கிடைப்பதால் இறப்புகள் குறைந்துள்ளன. பெண்களுக்கு பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் கிடைப்பதை உறுதி செய்வதே குழந்தைகள் இறப்பை தடுப்பதற்குத் தீர்வு. இந்திய நிலைமை இந்தியாவில் 70 சதவீதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழந்துள்ளன. (2021) ஆம் ஆண்டு கணக்கெடுப்பு: குறைந்த எடையில் பிறந்த குழந்தைகள், 500 கிராம் எடைக்கும் குறைவாகப் பிறந்த குழந்தைகள், குறிப்பிட்ட காலத்துக்குப் பின் தாய்ப்பால் கொடுக்காமல் நிறுத்தி விடுவது, ஊட்டச்சத்து பற்றாக்குறை; மீண்டும் மீண்டும் தொற்று நோயால் பாதிப்பு, துத்தநாக சத்துக் குறைபாடு, வைட்டமின் சி குறைபாடு காரணங்களால் 5,51,214 குழந்தைகள் இறந்துள்ளன. மேற்கண்ட காரணங்களால் 1990-2021-ஆம் ஆண்டுகளுக்கிடையே உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 20 லட்சம். கூடுதல் விபரங்களை https://ourworldindata.org/ (Half of all child deaths are linked to malnutrition) என்ற இணையபக்கத்தில் அறியலாம்.