சென்னை, செப்.11- ஆதார் அட்டை, இந்திய மக்களின் அடையாளமாக இருக்கிறது. வங்கிக்கணக்கு தொடங்குவது முதல் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளை பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்து கிறது. அதாவது, அதில் புதுப்பிப்பு என்பது பலரும் தங்களது முகவரி மற்றும் செல்போன் எண்களை மாற்றி இருப்பார்கள். முகங்கள் மாறி இருக்கும். ஆனால் ஆதாரில் பழைய புகைப்படங்கள் இருக்கும். அதேபோல் கைரேகை மாறி இருந்தால், அவர்களால் ரேசன் கடை, வங்கிகள் மற்றும் சிம் கார்டு வாங்கும் இடங்களில் சுயசான்று செய்வதில் பிரச்சனை இருக்கும். இந்த பிரச்சனைகளை தவிர்க்கத்தான் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் கூறுகிறது. அதற்காக 10 ஆண்டுகள் ஆன பிறகு சம்பந்தப்பட்ட வர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளலாம். அப்போது புகைப்படங்கள், கைரேகைகளை புதிதாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த நிலையில் ஆதார் புதுப்பிக்க 14 ஆம் தேதி வரை தான் கால அவகாசம் என்று பரவிய தவறான தகவல்களால் இ-சேவை மையம் மற்றும் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 55 லட்சம் பேர் ஆதார் அட்டையைபுதுப்பித்துள்ளனர்.