tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

தஞ்சாவூரில் ஒரே நாளில்  240 டன் குப்பைகள் சேகரிப்பு

தஞ்சாவூர், அக்.22 -  தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூர் மாநகரில்  செவ்வாய்க்கிழமை ஒரு நாளில் மட்டும் 240 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. தஞ்சாவூர் மாநகரிலுள்ள 51 வார்டுகளில் நாள்தோறும்  ஏறத்தாழ 110 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவது வழக்கம். இவை அனைத்தும் தஞ்சாவூர் ஜெபமாலை புரத்திலுள்ள குப்பைக் கிடங்குக்கும், நுண் உரக் கிடங்கு களுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், தஞ்சாவூர் மாநகரில் தீபாவளி பண்டி கையையொட்டி, காந்திஜி சாலை, அண்ணா சாலை, தெற்கு வீதி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதி களில் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டன. சில நாள்களாகப் புத்தாடைகள் வாங்க வருவதற்காக ஏராளமா னோர் கடை வீதிகளில் திரண்டனர். இதனால், இப்பகுதி களில் குப்பைகள் அதிக அளவில் சேர்ந்தன. கடை வீதிகள் மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகளி லும் தீபாவளிக்கு முந்தைய நாளும், தீபாவளி நாளான திங்கள்கிழமையும் வழக்கமான குப்பைகளுடன், பட்டாசுக் குப்பைகளும் சேர்ந்துவிட்டதால், இந்த இரு  நாள்களில் குப்பைகள் அதிகமாகின. எனவே, செவ்வாய் கிழமை அதிகாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை  ஏறக்குறைய 600 தூய்மைப் பணியாளர்கள் தொடர் மழை யிலும் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்தத் தூய்மைப் பணியில் 55 வாகனங்கள் பயன் படுத்தப்பட்டன. இதன் மூலம் ஏறத்தாழ 240 டன் குப்பை கள் அகற்றப்பட்டன. இது, கடந்த ஆண்டை விட 20 டன்கள்  அதிகம்.

கனமழை எச்சரிக்கை காரணமாக சதுரகிரி மலையேற தடை நீட்டிப்பு

வத்திராயிருப்பு, அக்.22– தொடர் மழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேறுவதற்கு அக்டோபர் 17 முதல் 21 வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்தத் தடை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், சதுரகிரி செல்லும் மலைப்பாதையில் உள்ள  நீரோடைகள், காட்டாறுகளில் நீர்வரத்து பெருகியுள்ளது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி, வனத்துறை மலை யேறும் தடை இன்னும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு வழங்கியுள்ளது. மழை குறைந்து, ஓடைகளில் நீர்வரத்து தணிந்த பின்னரே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தடை, ஐப்பசி மாத அமாவாசை வழிபாடு  மற்றும் சனிப் பிரதோஷம் ஆகிய தினங்களுக்காக சதுர கிரி வருவோருக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆம்னி பேருந்து பழுது

மாற்று ஏற்பாடு செய்யாததால் பயணிகள் மறியல் ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.22– தென்காசியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற  தனியார் ஆம்னி பேருந்து பழுதானதால், 17 மணி நேரமாக  சாலையில் சிக்கிய பயணிகள் கடும் அதிருப்தியடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின்படி, செவ்வாயன்று இரவு தென்காசியில் இருந்து 40 பயணிகளுடன் (முக்கியமாக கல்லூரி மாண வர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள்) பெங்களூரு  நோக்கி புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து, இரவு  10.30 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி  சுங்கச்சாவடி அருகே பழுதாகி நின்றது. பேருந்தை சரிசெய்ய முடியாத நிலையில் இருந்தும்,  நிறுவனத்தினர் மாற்று வாகன ஏற்பாடுகளை செய்யாத தால், பயணிகள் 13 மணி நேரத்துக்கும் மேலாக சாலையில்  காத்திருந்தனர். எந்தவித உணவு, தண்ணீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளும் வழங்கப்படாததால், பயணிகள் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் புதனன்று காலை மதுரை–கொல்லம் நான்கு வழிச்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பயணிகள் கூறுகையில், “ஒருவருக்கு ரூ.2,000 கட்ட ணம் செலுத்தி டிக்கெட் புக் செய்தோம். ஆனால் பேருந்து  நிறுவனம் மாற்று ஏற்பாடு செய்யவில்லை. 12 மணி  நேரத்துக்கும் மேலாக சாலையில் சிக்கி, குறிப்பாக  பெண் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்க வும், நாங்கள் ஊர் திரும்ப ஏற்பாடு செய்யவும் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர். பின்னர் போலீசார் சமரசம் செய்து, மாற்று வாகன ஏற்பாடு செய்யப்பட்டது.

போடி அருகே நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி 3 பேர் காயம்

தேனி, அக்.22- போடி அருகே சிலமலை நடுத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன் மகன் நடராஜன் (48). இவர் போடி-தேவாரம்  சாலையில் சிலமலை பெட்ரோல் பங்க் அருகே நடந்து  சென்றுள்ளார். அப்போது தேவாரம் சாலையில் வந்த இரு சக்கர வாகனம் நடராஜன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் நடராஜன் பலத்த காயமடைந்தார். இரு சக்கர வாகனம் கீழே விழுந்ததில் மோட்டார் பைக்கை ஓட்டி  வந்த கம்பம் புதுப்பட்டி ஊராட்சி அலுவலக தெருவை சேர்ந்த ராஜ் மகன் மணிகண்டன் என்ற வெங்கிடசாமி (50)  என்பவரும், இவரது மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த திருவள்ளூர் மாவட்டம் போளிபாக்கம் விக்னேஷ்வரா தெருவை சேர்ந்த சுப்பிரமணி மனைவி  நிரஞ்சனா (39) என்பவரும் பலத்த காயமடைந்தனர். காய மடைந்த 3 பேரும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.  இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மணி கண்டன் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

வைகை அணையிலிருந்து  2073 கன அடி நீர் வெளியேற்றம்

தேனி, அக்.22- வைகை அணையின் நீர்மட்டம் புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி  69.19 அடியாகவும் நீர்வரத்து விநாடிக்கு 3,173  கன அடி வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 2,073 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.  தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மூலவைகை, முல்லை பெரியாறு மற்றும் வைகையின் துணை ஆறுகளான கொட்டக்குடி, வராகநதி, சுருளி ஆறு உள்ளிட்ட பல ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஆகவே கடந்த 18 ஆம் தேதி ஒரே நாளில் நீர்மட்டம் 4அடி உயர்ந்து 66 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீர்மட்டம் திங்களன்று 69அடியாக உயர்ந்தது. இதனால் மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணையில் உள்ள அபாய சங்கு மூன்று முறை பலமாக ஒலிக்கப்பட்டது. பின்பு பெரிய, சிறிய மதகுகள் வழியே நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பூங்காவில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இப்பகுதியை கடக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது நீர்மட்டம் 69.19 அடி.(மொத்த அளவு 71). அணைக்கு நீர்வரத்து 3,173 கனஅடி. 2073 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.05 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 5,506 கன அடி. தமிழக பகுதிக்கு 1,655 அடி திறக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.80 அடி. நீர்வரத்து 201 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28. அணைக்கு வரும் 252.37 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழையளவு ஆண்டிபட்டி -12, அரண்மனைப்புதூர் -7.6, வீரபாண்டி -7.6, பெரியகுளம் -9.2, மஞ்சளாறு -12.6, சோத்துப்பாறை -8.2, வைகை அணை -13.2, போடி -16.2, பாளையம் -6.8, கூடலூர் -3.8, பெரியாறு அணை -4.2, தேக்கடி -3.6, சண்முகா நதி அணை -9.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.