tamilnadu

img

‘நிசார்’ செயற்கைக்கோள்  நாளை விண்ணில் ஏவப்படுகிறது

‘நிசார்’ செயற்கைக்கோள்  நாளை விண்ணில் ஏவப்படுகிறது

சென்னை, ஜூலை 28 - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் (NASA-ISRO) முதல் கூட்டு தயாரிப்பாக ‘நிசார்’ (‘NISAR’) எனும் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டு உள்ளது. செயற்கைத் துளை ரேடார் நிசார், ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் புதன்கிழமை (ஜூலை 30) மாலை 5.40 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 28 மணிநேர கவுண்ட்டவுன்  செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) பகல் 1.40 மணிக்கு தொடங்குகிறது. இதுதொடர்பாக, இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் அளித்த பேட்டியில், “இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கிய பூமியைக் கண்காணிக்கும் ரேடார் செயற்கைக்கோளான நிசார், 12 நாட்களுக்கு ஒரு முறை உயர் தெளிவுத்திறன் கொண்ட பூமித் தரவுகளை வழங்கும். இரவு, பகல் என அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை வழங்கும். எல் பேண்ட், எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் செயற்கைக்கோளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரே செயற்கைக்கோளில் 2 அலைவரிசைகள் கொண்ட கருவிகள் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்” என்று தெரிவித்துள்ளார்.