tamilnadu

img

பிரதமர் பிறந்த நாளை ‘வேலையின்மை தினம்’ ஆக்கிய 15 பேர் மீது வழக்கு... உ.பி.காவல்துறை அடாவடி

லக்னோ:
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினமாக கூறப்பட்ட செப்டம்பர் 17 அன்று டிவிட்டர் வலைதளத்தில் வேலையின்மை என்ற அர்த்தம் உடைய ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. பிரதமர் மோடியின் பிறந்தநாள் இரண்டாம் இடத்தையே பெற்றது.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று பாஜக மற்றும் மோடி 6 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியாக அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகள் கடந்த பிறகும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாமல் இருக்கின்ற வேலைகளையும் ஒழித்துக்கட்டும் பணியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதால் இந்தியா முழுவதும் இளைஞர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த கோபத்தை பிரதமர் மோடி பிறந்தநாளன்று இளைஞர்கள் சமூகவலைத்தளத்தில் வெளிப்படுத்தினர்.  

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் பிரதமர் மோடி பிறந்த தினத்தை ‘வேலையின்மை’ தினமாக அனுசரித்து மோடியின் உருவபொம்மையையும் எரித்துள்ளனர் என்று கூறி  அடையாளம் தெரியாத 11 பேர் மற்றும் அடையாளம் தெரிந்த 4 பேர் மீது பல பிரிவுகளின் கீழ் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஷாம்லி மாவட்ட பாஜக தலைவர் சத்யேந்திர தோமர் புகார் அளித்ததன் பேரில் பாரதிய சமாஜ் ரக்‌ஷக் யுவ மோர்ச்சா என்ற இளைஞர் அமைப்பின் தேசியத் தலைவர் பிரின்ஸ் கோரி என்பவருடன் சேர்த்து மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.