லக்னோ:
அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என்று உத்தரபிரதேச மாநில மத்திய சன்னிவக்பு வாரியம் முடிவு செய்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை சங்பரிவாரக்கும்பல் இடித்து தகர்த்தது. இந்த இடம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம்.அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம்.சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு 3 மாதங்களில் மத்திய அரசு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்காக தகுந்த இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் அயோத்தி விவகாரம் குறித்து உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரிய ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு சன்னி வக்பு வாரியதலைவர் சுபர் பரூக்கி செய்தியாளர் களிடம் கூறுகையில், வக்பு வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து பேசினோம். மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்வதில்லை என கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம். அதேசமயம் 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக் கொள்வது குறித்து ஒத்தக் கருத்து ஏற்படவில்லை. எனவே இதுபற்றி முடிவெடுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.