போபால்:
கோயிலில் திருமண நிகழ்ச்சியை நடத்துவதற்கு, தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.மத்தியப்பிரதேச மாநிலம், பர்கான்பூர் மாவட்டத்தில் உள்ளது பிரோடா கிராமம். இங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்வதற்காக அப்பகுதியைச் சேர்ந்த தலித் மணமகன் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது கோவிலில் உள்ளவர்கள், அந்த தலித் மணமகனின் குடும்பத்தினரை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் கோயிலுக்குள் வரக்கூடாது என்று தடை விதித்துள்ளனர்.தலித் இளைஞருக்கும், அவரது குடும்பத்திற்கும் கோயிலில் இழைக்கப்பட்ட இந்த தீண்டாமைக் கொடுமை கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்துள்ளன.இதனிடையே, தலித் குடும்பத்தினரை கோவிலுக்குள் அனுமதிக்காதது தொடர்பான புகாரை தீவிரமாக விசாரித்து வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணைக்கோட்ட அதிகாரி காசிராம் படோல் உறுதியளித்துள்ளார்.புகார் அளித்த தலித் இளைஞரின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று லால்பாக் காவல் நிலைய அதிகாரியும் தெரிவித்துள்ளார்.