tamilnadu

img

முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை:
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி விடுதலை கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன். இவர் 2000ஆம் ஆண்டில்  தி.மு.க.வுக்கு கட்சி மாறினார். இந்நிலையில், கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது காலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த எம்.கே.பாலனை ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்து, அவரது உடலை மூலக்கொத்தளம் மயானத்தில் எரித்துள்ளது.இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதிமுக நிர்வாகி பூங்காநகர் மாணிக்கம், செந்தில்குமார், சோமு, பாலமுருகன், ரோமித்தா மேரி உள்பட பலரை கைதுசெய்தனர்.

இந்த கொலை வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், ரோமித்தாமேரியை மட்டும் விடுதலை செய்தது. பூங்காநகர் மாணிக்கம் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அமர்வு நீதிமன்றத்தின் இந்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.சிறையில் இருக்கும் பூங்காநகர் மாணிக் கம் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.அம்மனுவில், “தண்டனை கைதிகள் முன் கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையின்படி முன்கூட்டியே விடுதலை பெற எனக்கு தகுதி இருந்தும், அரசு என்னை விடுதலை செய்யவில்லை. எனவே, தன்னை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதில் அளித்த அரசு தரப்பில் ஆஜரான குற்றவி
யல் வழக்குரைஞர் பிரபாவதி, மனுதாரர் தொடர்பான முழுமையான அரசின் நிலைப் பாட்டை அறிக்கையாக சமர்பிக்க கால அவகாசம் கேட்டார். இதையடுத்து விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.