போபால்:
மத்தியப்பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்திலுள்ள பாவ்கேதி கிராமத்தைச் சேர்ந்த ரோஷானி என்ற 12 வயது சிறுவனும், அவினாஷ் என்ற 10 வயது சிறுவனும், ஊராட்சி அலுவலகம் இருக்கும் பகுதியில் திறந்தவெளியில் மலம் கழித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த உள்ளூரைச் சேர்ந்த சாதிவெறியர்கள், அந்த 2 சிறுவர்களையும், கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். இவர்களில் அவினாஷின் தந்தை மனோஜ் கூலி வேலை செய்து வருபவர் ஆவார். இவர் வீட்டில் கழிப்பறை இல்லை. இந்நிலையிலேயே விவரம்புரியாத சிறுவனான 10 வயது அவினாஷூம்,12 வயது ரோஷானியும், ஊராட்சி அலுவலகம் இருக்கும் பகுதியில் திறந்தவெளியில் மலம் கழித்ததாக கூறப்படுகிறது.அப்போதுதான் அந்த கிராமத்தின் சாதி ஆதிக்கப்பிரிவைச் சேர்ந்த சகோதரர்கள் ஹகிம் யாதவ், ராமேஷ்வர் யாதவ் ஆகிய இருவரும், தலித் சிறுவர்களையும் கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்துள்ளனர். தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் அருகில் இருந்த மரத்தின் கிளையை உடைத்தார்கள் என்று கூறி, இதற்கு முன்பும் ஒருமுறை, இதே தலித்சிறுவர்களான அவினாஷ், ரோஷானி ஆகியோரை, யாதவ் சகோதரர்கள் தாக்கியுள்ளனர். ஆனால், இந்தமுறை படுகொலை அளவிற்கு அது சென்றுள்ளது.
இதனிடையே குற்றவாளிகளைக் காப்பாற்றும் விதமாக, தலித் சிறுவர்களைத் தாக்கிய ஹகிம் யாதவ், மனநலம் இல்லாதவர் என்று குவாலியர் சரக இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராஜ்பாபு சிங் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அவர், இரண்டு சிறுவர்களையும் குச்சியால் மட்டுமே அடித்ததாகவும், மேலும், இந்தச் சம்பவத்துக்கும் திறந்தவெளியில் மலம் கழித்ததற்கும் தொடர் பில்லை, அதேபோல் முன் பகையும் இல்லை என்று கூறியுள்ளார்.