tamilnadu

img

உ.பி.யில் வெளிச்சத்திற்கு வந்த ஆசிரியர் பணிநியமன ஊழல்

லக்னோ:
பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 69 ஆயிரம் ஆசிரியர்களை பணி நியமனம் செய்ததில், மிகப்பெரிய ஊழல் - முறைகேடு நடந்திருப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.உத்தரப் பிரதேச உதவி ஆசிரியர் களுக்கான தேர்வில் 95 சதவிகித மதி பெண்களைப் பெற்றவர் தர்மேந்திர படேல். இவருக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவர் பெயர்கூட தெரியவில்லை எனில், தேர்வு நடைபெற்ற லட்சணம் என்னவாக இருக்கும்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

உதவி ஆசிரியர் வேலைவாங்கித் தருகிறேன் என்று கூறி, சிலர் தன்னிடம் பல லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடிசெய்து விட்டதாக ராகுல் என்பவர் அலகாபாத் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரில் 9 பேரை போலீசார் அண் மையில் கைது செய்தனர். அவர்களில் தர்மேந்திர படேலும் ஒருவர். அவரிடம் விசாரணை நடத்தியபோதுதான், ஆசிரியர் தேர்வில் 95 சதவிகித மதிப்பெண்களைபெற்ற தர்மேந்திர படேலுக்கு குடியரசுத்தலைவரின் பெயர்கூட தெரிந்திருக்கவில்லை என்ற அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.தர்மேந்திர படேலைப் போலவே, அதிகமதிப்பெண் எடுத்த மேலும் 3 தேர்வர்களையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் கே.எல். படேல் என்பவரிடமிருந்து ரூ. 22 லட்சம் ரொக்கத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இவர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார்.இந்த விவகாரங்களை அடுத்து, உ.பி.தேர்வு ஒழுங்குமுறை ஆணையம் (ஈரா)நடத்திய ஆசிரியர் தேர்வில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் முறைகேடு நடந்திருக்கலாம்; பணத்தை வாங்கிக் கொண்டு அதிக மதிப்பெண் அளிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எழுப்பியுள்ளன.

பொது அறிவு குறித்த அடிப்படை கேள்விகளுக்கே, அதிக மதிப்பெண் எடுத்தவர்களிடம் பதில் இல்லை எனும்போது, தேர்வு முறைகளில் நிச்சயமாகமுறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறும் எதிர்க்கட்சிகள், வெளிப்படைத் தன்மை இல்லாத இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.‘ஈரா’ நடத்திய ஆசிரியர் பணி நியமனத்தேர்வு முறைக்கு, உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. 2019 ஜனவரி 6-இல் நடைபெற்ற ஆசிரியர் தேர்வுக்கான முடிவுகள் 2020 மே 12 அன்று வெளியிடப்பட்ட நிலையில், சிலகேள்விகள் மற்றும் பதில்கள் தெளிவற்றுமற்றும் தவறானவையாக இருக்கின்றன; எனவே, இந்த தேர்வு மீது, யு.ஜி.சி.யின் ஆய்வு தேவை என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் வழக்குகள் தொடரப்பட்டன. இடஒதுக்கீடு, குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம் உள்ளிட்ட விஷயங்களிலும் சர்ச்சைகள் எழுந்தன. அதனடிப்படையில், ஜூன் 3 அன்று லக்னோ அமர்வு நீதிபதி அலோக் மாத்தூர் தேர்வு செயல்முறையை நிறுத்திவைத்தார்.இதற்கிடையேதான், ஆசிரியர் வேலைவாங்கித் தருகிறேன் என்று கூறி லஞ்சம் வாங்கிய 9 பேர் சிக்கியுள்ளனர். குறைந்தபட்ச பொது அறிவுகூட இல்லாதவர்கள் 95 சதவிகித மதிப்பெண் பெற்றதும் அம்பலமாகி இருக்கிறது.

ஆதித்யநாத் அரசு தற்போது தனிப் படை அமைத்து, ஆசிரியர்கள் தேர்வு நியமன ஊழலை விசாரிப்பதாக இறங்கி வந்துள்ளது.ஆனால், மத்தியப்பிரதேச பாஜக ஆட்சியில் நடந்த வியாபம் ஊழலைப் போல, உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆசிரியர் தேர்வு நியமன ஊழலிலும் பலஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம் என்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.