லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியிலுள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு சத்துணவு என்ற பெயரில் ஒரே ஒரு சப்பாத்தியும், தொட்டுக் கொள்வதற்கு உப்பும் மட்டுமே கொடுக்கப்பட்ட செய்தி அண்மையில் வெளியாகி, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, தனது தவறை ஒப்புக் கொள்வதற்கு மாறாக, உண்மையை வெளிக்கொண்டுவந்த பத்திரிகை நிருபர் மீது வழக்கு போட்டது.இந்நிலையில்தான், அதே உத்தரப்பிரதேச மாநில பள்ளியொன்றில், 1 லிட்டர் பாலை, ஒரு வாளி தண்ணீரில் கலந்து காய்ச்சி, அதனை ‘சத்துணவு’ என்று வழங்கி வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலத்தின் பின்தங்கிய மாவட்டமாக அறியப்படுவது சோன்பத்ரா மாவட்டமாகும். இங்குள்ள சோபான் என்ற இடத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்குதான் 1 லிட்டர் பாலை, ஒரு வாளி தண்ணீரில் கலந்து காய்ச்சி, அதனை 81 மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.ஆரம்பப் பள்ளிகளில் தலா 150 மி.லி. பாலும், மேல்நிலைப் பள்ளிகளில் தலா 200 மி.லி. பாலும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், 81 மாணவர்களுக்கும் சேர்த்தே மொத்தம் 1 லிட்டர் பால்தான் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 6 மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 1 லிட்டர் பாலை, 81 பேருக்கு தண்ணீரில் கலந்து காய்ச்சி கொடுத்து வந்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.ஆனால், உத்தரப்பிரதேச அரசோ, வழக்கம்போல தன்மீது தவறில்லை என்று காட்டிக் கொள்ளளும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. பாக்கெட் பால் போதிய அளவில் பள்ளியில் இருந்தும், அதனை மாணவர்களுக்கு வழங்காமல் ஊழியர் தவறு செய்து விட்டதாக, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் முகேஷ் குமார் சமாளித்துள்ளார். மேலும், அந்த ஊழியரை சஸ்பெண்ட் செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். தற்போது நீதிமன்றமும் அந்த ஊழியர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.ஆனால், சமையலர் பூல்வந்தியோ அதிகாரியின் குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ளார். “எப்போதுமே என்னிடம் ஒரே ஒரு பால் பாக்கெட்டைக் கொடுத்துத்தான், குழந்தைகளுக்கு பால் விநியோகிக்கச் சொல்கின்றனர். அதனால்தான் ஒருவாளி தண்ணீரில் கலந்து கொடுத்தேன்; நான் வேறு என்னதான் செய்வது?” என்று சமையலர் பூல்வந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.