மக்களிடையே தந்திரம் செய்து சம்பாதிப்பவர்களுக்கு புலியின் உடல் பாகங்களை விற்ற 17 பேர் மத்தியப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மக்களிடையே விலங்குகளின் உடல் பாகங்களினால் பயன் கிடைக்கும் என்று ஏமாற்றி புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட விலங்குகளின் பாகங்களை விற்கும் பலர் உலாவி வருகின்றனர். இவர்களுக்காக காட்டு விலங்குகளை கொல்லும் வேட்டைக்காரர்களும், வெளிநாடு முதற்கொண்டு பாகங்களை விற்கும் வியாபாரிகளும் செயல்பட்டே வருகின்றனர்.
இதேபோன்று மத்தியப்பிரதேச மாநிலத்தின் பென்ச் தேசிய பூங்காவிலிருந்த புலி ஒன்றை கொன்ற வேட்டைக்காரர்கள், மக்களிடையே உடல் பாகங்களை விற்கும் சிலர் மற்றும் வியாபாரிகள் என 17 பேரை மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேச வனத்துறையினர் இணைந்து கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் அனைவரும் வன உயிரிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்து இரண்டு வளர்ந்த புலிகள், ஒரு புலிக்குட்டி மற்றும் ஒரு சிறுத்தை ஆகியவற்றின் நகங்கள் மற்றும் பாதங்கள் என விலங்குகளின் உடல் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.