tamilnadu

img

கொரோனா பலி எண்ணிக்கையில் ஸ்பெயினை மிஞ்சிய பிரிட்டன்....

லண்டன் 
கொரோனா வைரஸால் அதிக சேதாரத்தைச் சந்தித்த கண்டம் ஐரோப்பா தான். இத்தாலியிலிருந்து மிதமான வேகத்தில் பரவிய கொரோனா தற்போதைய நிலையில் ஐரோப்பா நாடுகளில் உள்ள அனைத்து நாடுகளைத் துவம்சம் செய்து வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகள் மட்டும் தான். 

மேற்குறிப்பிட்ட 6 நாடுகளில் ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் நாடுகள் பலி எண்ணிக்கையில் சற்று பரவாயில்லை. ஆனால் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் பலி எண்ணிக்கையில் புதிய வரலாற்றை உருவாக்கி வருகின்றன. அங்கு இதுவரை 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். தற்போது புதிதாக ரஷ்யா இந்த பட்டியலில் சேரவுள்ளது. அங்கு கொரோனா பரவல் தாறுமாறாக உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிட்டன் சாம்ராஜ்யம் கொரோனாவால் உருக்குலைந்து வருகிறது. இதுவரை அங்கு 1 லட்சத்து 71 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26 ஆயிரத்து 771 பேர் பலியாகியுள்ளனர். 

4 நாடுகளை உள்ளடக்கிய அமைப்பாக இருப்பதாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரத்தில் திடமான தகவல் இல்லை. குறிப்பாக கொரோனா பலி எண்ணிக்கையில் உலகில் 3-வது இடத்தில் உள்ள ஸ்பெயினை பின்னுக்குத்தள்ளி அந்த இடத்தை பிரிட்டன் பிடித்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் (63 ஆயிரம்), இத்தாலி (27 ஆயிரம்) 2-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.