கொல்கத்தா:
மேற்குவங்கத்திற்கும், வங்கதேசத் திற்கும் இடையே கரையை கடந்த உம்பன் புயலால் அப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
வங்கக்கடலில் உருவான உம்பன் புயல், சூப்பர் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரத் தொடங்கியது. புதனன்று காலை பூரி - கொல்கத்தா இடையே வங்கக் கடலில்மையம் கொண்டிருந்தது. இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இந்நிலையில் உம்பன் புயல் மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து, வலுவிழந்து, மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதியில் பிற்பகல் 2.30 மணியளவில் கரை கடந்தது. அப்போது மணிக்கு 160 கி.மீ. முதல் 170 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. ஒடிசாமற்றும் மேற்கு வங்கத்தில் மழையும் படிப்படியாக அதிகரித்தது. புயல் கரைகடந்த பிறகு, வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, கொல்கத்தாவுக்கு அருகில் செல்லக்கூடும். இதனால் கனமழை பெய்து, நகரின் தாழ்வான பகுதிகளில் கடுமையான சேதம் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.முன்னதாக ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் 4.5 லட்சம் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப் பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.