tamilnadu

img

தொழிலாளர்கள் தங்களது சிரமங்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை  கேரள முதல்வர் பின்னராய் விஜயன் தகவல்

திருவனந்தபுரம், மார்ச் 31- தொழிலாளர்கள் தங்களது சிரமங்களை தெரிவிக்க மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும் என கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறியது: கோட்டயம் அருகே உள்ள பாயிப்பாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதில் திட்டமிட்ட சதி உள்ளது. கொரோனா நோயை கட்டுப்படுத்துவதில் கேரளா மேற்கொண்டு வரும் நல்ல திட்டங்களை மூடி மறைப்பதற்காகவே இந்த செயல் நடந்துள்ளது. இதன் பின்னணியில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட சக்திகள் செயல்பட்டுள்ளன. இவர்களை கண்டு பிடிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
வெளிமாநில தொழிலாளர்கள் வசிக்கும் முகாம்களின் மேற்பார்வை பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி மற்றும் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய குழு முகாம்களில் பரிசோதனை நடத்தும். தொழிலாளர்களிடையே  போராட்டத்தை தூண்டிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர்களிடையே தவறான தகவலை பரப்பிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
சில முகாம்களில் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். அங்கு இவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும். தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களில் டிவி உட்பட பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். வெளிமாநில தொழிலாளர்கள் நல்ல முறையில் தங்குவதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அரசின் கொள்கையாகும். வேலை இல்லாத சமயங்களில் அவர்கள் முழுநேரமும் முகாம்களிலேயே இருப்பார்கள். எனவே இந்த முகாம்களில் அவர்களுக்கு தேவையான வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு விருப்பப்பட்ட உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகாம்களுக்கு சென்று தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த இந்தி மொழி தெரிந்த ஹோம் கார்டுகளின் சேவை பயன்படுத்தப்படும். தொழிலாளர்கள் தங்களது சிரமங்களை தெரிவிக்க மாநில அளவில் ஒரு கட்டுபாட்டு அறை திறக்கப்படும். கோவிட் 19 பரவி வரும் சூழ்நிலையில் போலீசார் மிகுந்த சிரமத்துடன் கடும் வெயிலில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக மாநில அளவில் ஆயுதப்படை ஏடிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.