திருவனந்தபுரம்:
உலக சுற்றுச் சூழல் தினத்தில் (ஜுன் 5)1.09 கோடி மரங்கள் நடும் திட்டம் கேரளத்தில் தொடங்கியது. முதல் கட்டமாகவெள்ளியன்று 81 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன, திட்டத்தின் இரண்டாவது கட்டமாக ஜுலை 1 முதல் 7 வரை 28 லட்சம்செடிகள் நடவு செய்யப்பட உள்ளன.
கேரள அரசு செயல்படுத்தி வரும் ‘ஒருகோடி பழ மரங்களின் சாகுபடி’ திட்டத் தின் கீழ் இவை நடப்படுகின்றன. வெள்ளியன்று தலைமைச் செயலக தர்பார் ஹாலில்இந்த திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வேளாண்துறை அமைச்சர் பி.எஸ்.சுனில்குமார் தலைமை வகித்தார்.இந்த திட்டத்தில் 31 வகையான பழமரங்களின் ஒரு கோடி கன்றுகள் உற்பத்திசெய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும். அவை பொது இடங்களில் நட்டு வளர்க்கப்படும். வேளாண் பல்கலைக்கழகம், உள்ளாட்சி, வனம், கல்வித்துறைகள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன. உள்ளாட்சி அமைப்புகள், குடும்பஸ்ரீ, மகாத்மா காந்தி, அய் யன்காளி வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள், தன்னார்வலர்கள் போன்றோரின் உதவியுடன் வீட்டு வளாகங்கள், பள்ளி வளாகங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற இடங்களில் பழ மரங்கள் நட்டு வளர்த்து பராமரிப்பார்கள்.
வனத்துறையினர் வியாழனன்று 57.7 லட்சம் மரக்கன்றுகளை விநியோகித்தனர். மாநில அளவிலான துவக்க நிகழ்ச்சி குடப்பனக்குந்நு தூர்தர்சன் வளாகத்தில் வனத்துறை அமைச்சர் கே.ராஜூ தலைமையில் நடைபெற்றது. அனைத்து காவல் நிலையங்களும் குறைந்தது 5 மரக் கன்றுகளை சுற்றுச் சூழல் தினத்தில் நட வேண்டும் என காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹ்ரா உத்தரவிட்டுள்ளார். பட்டாலியன்கள் மற்றும் ஏ.ஆர் முகாம்களில் தலா 100 மரக்கன்றுகள் நடப்படும்.
மாநில அளவில் சிபிஎம் ஏற்பாடு
சுற்றுச் சூழல் தினத்தில் கேரளம் முழுவதும் பழ மரங்கள் நட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அதற்கான தொடக்க நிகழ்ச்சி திருவனந்தபுரம் இஎம்எஸ் அகாடமியில் வெள்ளியன்று காலை நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் கொடியேரிபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கேரள அரசின் சுபிக்ஷ திட்டத்துடன் இணைந்துஇந்த நிகழ்ச்சிகளுக்கு மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம், வட்டார அளவில் மரக்கன்று நடவு நிகழ்ச்சி நடைபெறும். மரக்கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பை கட்சிஉறுப்பினர்களும் அணிகளும் ஏற்றுக் கொள்வார்கள்.