திருவனந்தபுரம்:
மக்களவை தேர்தலில் கேரள வகுப்புவாத சக்திகளின் மறைமுக திட்டங்களை முறியடித்து ஆலப்புழா தொகுதியில் எல்டிஎப் சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் ஏ.எம்.ஆரிப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட யுடிஎப் வேட்பாளர் ஷானிமோள் உஸ்மானைவிட 10 474 வாக்குகள் அதிகம் பெற்றார்.
கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 19 இடங்களை காங்கிரஸ் தலைமையிலனா ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) ஆலப்புழா தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றுள்ள சிபிஎம் வேட்பாளர் ஏ.எம்.ஆரிப், கட்சியின் ஆலப்புழா மாவட்டக்குழு உறுப்பினராகவும் சேர்த்தல வட்டாரக்குழு செயலாளராகவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவராகவும் உள்ளார். வங்கி சாரா தனியார் நிதி நிறுவன ஊழியர் சங்க (சிஐடியு) மாநில தலைவராகவும் உள்ளார். ஆலப்புழா எஸ்.டி.கல்லூரி, சேர்த்தலா எஸ்.என்.கல்லூரி, திருவனந்தபுரம் சட்டக்கல்லூரிகளில் படித்துள்ளார். அப்துல் மஜீத், நபீஸா தம்பதியின் மகனாவார். டாக்டர். சபனாஸ் என்கிற மனைவியும், சல்மான் ஆரிப், ரிஸ்வான் ஆரிப் ஆகிய மகன்களும் உள்ளனர்.
வாக்கு விவரம்:
ஏ.எம்.ஆரிப் (எல்டிஎப்) - 4,45,970
ஷானிமோள் உஸ்மான் (யுடிஎப்) – 4,35,496
கே.டிஸ்.ராதாகிருஷ்ணன் (பாஜக) - 1,87,729
கே.எஸ்.ஷான் (எஸ்டிபிஐ) - 3,595
பிரசாந்த்பிம் (பிஎஸ்பி) - 2,431