tamilnadu

img

இந்தியர்கள் நாடு திரும்ப நிபந்தனை கூடாது மருத்துவச் சான்று கோருவது மனித உரிமை மீறல்... கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்

திருவனந்தபுரம்:
இத்தாலி, கொரியா போன்ற நாடுகளிலிருந்து இந்தியா திரும்புவோர் மருத்துவ சான்று காட்ட வேண்டும் என்கிற மத்திய அரசின் முடிவு மனித உரிமை மீறல் எனவும், இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் எனவும் கேரள சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். இச்செய்கை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை இரக்கமின்றி கைவிடுவதற்கு சமமாகும். நமது நாட்டினரை இங்கு வருவதிலிருந்து விலக்கி வைக்கும் சுற்றறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை சட்டமன்றம் கேட்டுக்கொள்வதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கோவிட் -19 உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளதைத் தொடர்ந்து பயணம் செய்வோர் ஏராளமான சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த வெளிநாடுகளில் வாழ்வோர் மிகவும் துன்பகரமான சூழ்நிலையை பல இடங்களிலும் எதிர்கொள்வது தெரியவந்துள்ளது. மத்திய அரசு நோய் வராமல் பாதுகாப்பதுடன் பயணம் செய்வோரின் சிரமங்களை போக்கவும் வேண்டும். இதற்கான உடனடி தலையீடு தேவை. அதற்கு பதிலாக விதிகளை மேற்கொள்வது சட்டங்களின் கடினத்தன்மையை அதிகரிக்கும் என்பது மிகுந்த கவலை அளிப்பதாகும். இதை முழுமையாக கைவிட வேண்டும்.

சீனாவின் வுகானிலிருந்து மாணவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசு கோரியது. அதைத் தொடர்ந்து அவர்கள் ஊர் திரும்ப ஏற்பாடு செய்ததுடன் அவர்கள் மருத்து பரிசோதனைகளுக்காக தனியிடங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. பரிசோதனைகளுக்கு பிறகு நோய் அறிகுறிகள் இல்லாதவர்கள் அவர்களது வசிப்பிடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படவும் செய்தனர். சோதித்து வெற்றி கண்ட அனுபவம் நம்முன் உள்ளபோது மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் 05.03.2020 அன்று அதற்கு மாறாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 

இத்தாலி மற்றும் கொரிய குடியரசிலிருந்து பயணம் தொடங்கியவர்களும் அந்த நாடுகளுக்கு சென்றுள்ளவர்களும் கோவிட் -19 அறிகுறிகள் இல்லை என மருத்துவ சான்று அளித்த பிறகே இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சுற்றறிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளது. மார்ச் 10 நள்ளிரவு 12 மணி முதல் 4/1/2020-IR என்கிற எண்ணுள்ள அந்த சுற்றறிக்கை அமலுக்கு வந்துள்ளது. அடிப்படையிலேயே இது மனிதாபிமானமற்ற செயலாகும். இது வெளிநாட்டிலுள்ள இந்தியர்களை இரக்கமின்றி கைவிடுவது போன்றது. 

இத்தாலியில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்த மலையாளிகள் உள்ளிட்ட இந்தியர்கள் விமானத்தில் ஏற முடியவில்லை. இது அவர்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் தற்போது இவர்களை பரிசோதித்து அனுப்பத் தேவையான மருத்துவ ஏற்பாடுகள் இல்லை என்பதை அவர்களை தொடர்பு கொண்டதில் புரிந்து கொள்ள முடிகிறது.அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை பரிந்துரைப்பது நியாயமில்லை என்றும் அவர்கள் பயணம் செய்து திரும்பி வர அனுமதிக்க வேண்டும் என்றும், இங்கு வந்த பிறகு தேவையான மருத்துவ பரிசோதனைகளை விதிகளின்படி மேற்கொள்ளலாம் எனவும் கூறி மாநில அரசு ஏற்கனவே பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. வெளிநாடுகளில் வாழும் நமது நாட்டினரை இத்தகைய இக்கட்டான நிலையில் மேலும் சிரமத்தை கொடுப்பது நீண்ட காலமாக நாம் மேற்கொண்டுவரும் அணுகுமுறைக்கு எதிரானது. நமது நாட்டின் வளர்ச்சியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் அறிவை பகிர்வதிலும் வெளிநாடு வாழ் இந்திய சமூகம் வகிக்கும் பங்கு விலைமதிப்பற்றது.    

நெருக்கடியான காலத்தில் அவர்களை மிகவும் சிரமப்படுத்தும் அணுகுமுறை குறித்து இந்த அவை ஒருமனதாக தனது கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. நமது சமூகத்தின் அனைத்து துறைகளுக்கும் பங்களிப்பு செய்ய நமது குடிமக்கள் இங்கு வருவதைத் தடைசெய்யும் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெறுமாறு இந்த அவை மத்திய அரசிடம் கேட்டுக் கொள்கிறது.அதே நேரத்தில், வெவ்வேறு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் இங்கிருந்து திரும்பிச் சென்று பணியில் சேர அந்தந்த நாடுகளில் உள்ள பல்வேறு நிபந்தனைகளின் காரணமாக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்தநிலையில் நமது தரப்பிலிருந்தும் விதிகள் கடுமையாக்கப்படுகின்றன.  . இது வெளிநாடுவாழ் இந்தியரை பெரிதும் பாதிப்பதாகும். நோய் பரவாமல் பார்த்துக் கொள்ளும்போதே இந்த விதிமுறைகளைத் தணிக்கவும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். வேலைக்கு திரும்பிச் செல்ல முடியாமல் சிரமப்படுவோருக்கு விசா காலம் மற்றும் திரும்பும் காலத்தை நீட்டிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு  உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அவை கேட்டுக்கொள்கிறது என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஏகமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.