திருவனந்தபுரம், மே 20- தொடர்புகள் மூலம் ஏற்படும் நோய் பரவலே அடுத்த கட்டம், அத்தகைய சமூக பரவல் இதுவரை அதிகரிக்கவில்லை, தொடர்புகள் மூலம் ஏற்படும் பரவல் அச்சமளிப்பது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரத்தில் செவ்வாயன்று கோவிட் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாது: ‘சுகாதார ஊழியர்கள், முதியோர் மற்றும் கண்காணிப்பில் உள்ளவர்களிடம் நோய் தொற்று எந்த அளவுக்கு உள்ளது என்பது சமூக பரவலை புரிந்து கொள்ள உதவும். இத்தகைய முன்னுரிமை பகுதியினரின் (சென்டினரி சர்வைலன்ஸ்) 5,630 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 5,340 மாதிரிகளில் நோய் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
இத்தகைய ஆய்வில் 4 பேருக்கு மட்டும் நோய் உள்ளதாக கண்டறியப்பட்டது. இதிலிருந்து கேரளத்தில் சமூக பரவல் ஏற்படவில்லை என்பதை அறிய முடிகிறது. “இந்த அனுபவத்திலிருந்து, ‘பிரேக் தி செயின்’ வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதற்கும், தனிமைப்படுத்தலை செயல்படுத்துவதற்கும் நம்மால் சாத்தியமாகியுள்ளது என்றும் முதல்வர் கூறினார். 12 பேருக்கு கோவிட் கேரளத்தில் 12 மேலும் பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. கண்ணூர் 5, மலப்புறம் 3, பத்தனம்திட்டா, ஆலப்புழா, திரிச்சூர், பாலக்காடு தலா ஒருவர். இவர்கள் அனைவரும் வெளியிலிருந்து வந்தவர்கள். 4 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 6 பேர் மகாராஸ்டிரா, இருவர் குஜராத், தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள்.
செவ்வாயன்று யாரும் குணப்படுத்தப்படவில்லை. கேரளத்தில் இதுவரை 642 பேருக்கு கோவிட் கண்டறியப்பட்டது. இப்போது அதில் 142 பேர் சிகிச்சையில் உள்னர். 72000 பேர் தனிமை- கண்காணிப்பில் உள்ளனர். செவ்வாயன்று 119 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது மாநிலம் முழுவதும் 33 ஹாட் ஸ்பாட்டுகள் உள்ளன. கண்ணூர் மாவட்ட பானூர் நகராட்சி, சோக்லி, மய்யில் பஞ்சாயத்து மற்றும் கோட்டயம் கோட்டயம் மாவட்டத்தில் கோருத்தோடு ஆகியவை புதிய ஹாட்ஸ்பாட் ஆகும். முதலமைச்சர் பினராயி விஜயன், தனது பிம்பத்தை மேம்படுத்துவதற்காக மக்கள் தொடர்பு (பிஆர்) ஏஜென்சிகளை அரசு நியமித்துள்ளது என்ற எதிர்க்கட்சியின் கூற்று குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்கையில், வேறு யாரிடமாவது அறிவுரை கேட்டு பதிலளிப்பவன் நான் என்று சாதாரண அறிவுள்ள யாரும் கூறமாட்டார்கள். ‘நீங்கள் நிறைய கேள்விகள் கேட்கவில்லையா? நான் ஏதேனும் பிஆர் நிறுவனத்தை கேட்டு பதிலளிக்கிறேனா? சில நேரங்களில் நீங்கள்கூட என்ன கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவீர்கள். ஆனால், நான் சுதந்திரமாக இருக்கிறேன். நீங்கள் தாராளமாகக் கேட்கிறீர்கள். நான் ஏதேனும் கேள்விக்கு பதிலளிக்கவில்லையா? அல்லது ஏதேனும் பி.ஆர் ஏஜென்சியின் முன்மொழிவுக்காக காத்திருக்கிறீர்களா? இந்த நாட்டுக்கு என்னைத் தெரியும் என்று முதல்வர் பதிலளிததார். எங்கிருந்தும் கேரளத்திற்கு ரயில் வருவதில் எந்த தடையும் இல்லை.
குஜராத்திலிருந்து மலையாளிகள் வர ரயில் ஒதுக்கப்பட்டதாகவும், கேரளம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்ற பிரச்சாரத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை. மாநிலத்திற்கு நிறைய ரயில்கள் வருகின்றன. “வருபவர்களை தனிமைப்படுத்த ஒரு வழிமுறை உள்ளது,” என்று அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.