திருவனந்தபுரம்:
ஊழல் முறைகேடுகளில் பழகிப்போனவர்கள் அதிலிருந்து மாறாவிட்டால் வீட்டில் தூங்க முடியாத நிலை ஏற்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்தார்.மட்டனூரில் நடந்த அரசுமருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது:ஆட்சி அதிகாரத்தின் உயர்நிலையில் முழுமையாக ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அனைவரும் மாறாவிட்டால் சிரமம் ஏற்படும். ஊழல்வாதிகள் அரசு தரமாக கட்டிவைத்துள்ள கட்டடங்களில் படுக்க வேண்டியதாகிவிடும். ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவோர் இதை நினைவில் கொள்வது நல்லது. இந்தியாவில் ஊழல் மிகவும் குறைந்த மாநிலம்கேரளமாகும். ஆனால், முழுமையாக ஊழல் இல்லை என்று கூறிவிட முடியாது. அரசு ஊழியர்களுக்கு நியாயமான சம்பளம் அரசால் வழங்கப்படுகிறது. அதில் பெரும் பகுதியினர் திருப்தியாக உள்ளனர். சிலர் மட்டுமே இந்த கெட்ட வழியை பின்பற்றுகின்றனர். பிடிபடும் வரை மட்டுமே இதை அனுபவிக்க முடியும். சிக்கினால் அதுவரை உள்ளதெல்லாம் இல்லாமல் போகும் என்பது மட்டுமல்ல சமூகத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் தனிமைப்படுவார்கள். உதவி செய்தவர்களும் தனிமைப்படுவார்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கை வேண்டுமா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.அலுவலகங்களில் தரும்மனுக்களில் உள்ள வாழ்க்கை குறித்த பிரச்சனைகளை உள்வாங்குவ தும், மனிதாபிமானத்துடன் அணுகுவதும் ஊழியர் களுக்கு சாத்தியமாக வேண்டும். பொதுமக்களின் வரிப்பணத்தில் வாழ்கிறோம் என்கிற உணர்வு எப்போதும் இருக்க வேண்டும். மக்களின் சேவகர்கள் நாம். உண்மையான எஜமானர்களை வேலைக்காரர்களாக பார்க்கக்கூடாது. பெரும்பாலானவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். சிலர் மட்டுமே இதிலிருந்து விலகி நிற்கிறார்கள். அதிலும் மாற்றம் வர வேண்டும் என்று முதல்வர் கூறினார்.