tamilnadu

img

கொரோனா மரணம்... இந்திய சராசரி 48, கேரளம் 8.4 கர்நாடகத்தில் 12 மடங்கு அதிகம்

திருவனந்தபுரம்:
கேரளத்தில் கோவிட் இறப்பு விகிதம் பத்து லட்சத்திற்கு 8.4 பேர். தமிழ்நாட்டில் இது கிட்டத்தட்ட 11 மடங்குஅதிகம். கர்நாடகாவில், இறப்பு விகிதம் கேரளத்தைவிட 12 மடங்கு அதிகம். ஆந்திராவில், இறப்பு விகிதம் பத்து லட்சத்துக்கு 77.2. இந்திய சராசரி 48 என கேரள முதல்வர் பினராயிவிஜயன் தெரிவித்தார்.இதுகுறித்து சனியன்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

கோவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கேரளம் மேற்கொண்ட விழிப்புணர்வும் நடவடிக்கையும் மேம்பட்டது என்பதைமற்ற மாநிலங்களின் நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் காணலாம். குறியீடுகள் எதுவாக இருந்தாலும், இந்த தொற்று நோயை ஒப்பீட்டளவில் சிறந்த முறையில் கையாள்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.இந்தியாவில் முதல் கோவிட் 19 நோய் இந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி கேரளாவில் பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் பத்து லட்சத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பார்த்தால் கேரளாவில் 2168 ஆகும். ஆந்திராவில் 8479, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 5000-க்கும் அதிகம். தெலுங் கானாவில் 3482. இந்திய சராசரி 2731.மக்கள்தொகை அடர்த்தியைப் பொறுத்தவரை இந்த மாநிலங்களைவிட கேரளா மிகவும் முன்னிலையில் உள்ளது என்றும் முதல்வர் கூறினார்.சிகிச்சை பெறுவோர் எண்ணிக் கையில் அண்டை மாநிலங்களை விடகேரளம் மிகச் சிறந்த நிலையில் உள்ளது. செப்டம்பர் முதல் தேதியின்படி,கேரளத்தில் 22,578 பேர் சிகிச்சையில் இருந்தனர். கர்நாடகாவில் 91,018.ஆந்திராவில் 1,01,210 பேரும். தமிழகத்தில் 52,379, தெலுங்கானாவில் 32,341 பேர் சிகிச்சை பெற்றனர்.

கேரளாவில் கடுமையான வெளியேற்றக் கொள்கை (Discharge Policy) உள்ளது. மற்ற பகுதிகளில்,10 நாட்களுக்குப் பிறகு எந்த அறிகுறிகளும் இல்லை என்றால் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் கேரளத்தில், ஆன்டிஜென் சோதனை எதிர்மறையாக வந்தபின்னரே நோயாளி விடுவிக்கப்படுகிறார். மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்கிற முடிவில் அரசு சமரசம் செய்யாது. அதனால்தான் இங்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இறப்புகள் மட்டுமே நிகழ்கின்றன.இறப்பு சதவிகிதம், அதாவது பாதிக்கப்பட்ட 100 பேரில் இறப்பு எண்ணிக்கை கேரளாவில் 0.4 ஆகும்.இது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 1.7 ஆகவும், ஆந்திராவில் 0.9 ஆகவும் உள்ளது. முதியவர்கள் மற்றும் புற்றுநோய், நீரிழிவு போன்ற நோய் களால் பாதிக்கப்படுபவர்கள் இந்தியாவிலேயே அதிகமுள்ள மாநிலம் கேரளம். ஆனாலும், குறைந்தபட்ச இறப்பு எண்ணிக்கையை பராமரிப் பது நாம் நாடு முழுவதும் மேற் கொண்ட பணிகளின் சிறப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று முதல்வர் கூறினார்.

சோதனைகளைப் பொறுத்தவரையில் கேரளா வெகுதூரம் முன்னிலையில் உள்ளது. இது உலக சுகாதாரஅமைப்பு மற்றும் ஐ.சி.எம்.ஆர் உள்ளிட்ட அனைத்து நிபுணத்துவ நிறுவனங்களின் வரையறுக்கப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. அதன்படி, பத்து லட்சத்தில் எத்தனைசோதனை என்பதை பத்து லட்சத்தில்எத்தனை நோயாளிகள் என்பதுடன் வகுத்து கணக்கிடும் (டெஸ்ட் பெர்மில்லியன் பை கேஸ் பெர் மில்லியன்) அறிவியல் குறியீட்டின்படி பார்த்தால், கேரளா சிறந்த முறையில் சோதனைகள் நடத்தி வருவதைக் காணலாம்.கேரளத்தின் சோதனை டெஸ்ட்பெர் மில்லியன் பை கேஸ் பெர் மில்லியன் 22 ஆகும். தமிழ்நாடு 11 ஆகும்.வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 22 பேர் பரிசோதிக்கப்படும் போது, ஒரு நபருக்கு நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் நடத்தப்பட்ட 11 சோதனைகளில், ஒருவருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தெலுங்கானாவில் 10.9 ஆகவும், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 8.4 ஆகவும் உள்ளது.

சோதனையில் நேர்மறை விகிதம் (positivity rate) குறைவது நல்லது. கேரளத்தின் சோதனை நேர் மறை விகிதம் 4.3 ஆகும். இது தமிழ்நாட்டில் 8.9, தெலுங்கானாவில் 9.2 , கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 11.8 ஆகும். இந்த மாநிலங்களை விடகேரளா சோதனைகளை சிறப்பாக நடத்தியது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதன்மூலம் கோவிட் தடுப்பு நடவடிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டதை விளங்க முடியும் என்றும், இந்த புள்ளிவிவரங்களை அரசாங்கம் ஆராய்ந்து, வரும் நாட்களில் நோய் பரவுவதைக் குறைப்பதற்கான தலையீடுகளை அரசு மேற்கொள்ளும் என்றும் முதல்வர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.