tamilnadu

img

மத்திய அரசிடமிருந்து உரிய ஜிஎஸ்டி பங்கினைப் பெற அனைத்து எதிர்க்கட்சி மாநில அரசுகளும் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்

திருவனந்தபுரம்:
மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அளிக்கவேண்டிய உரிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றிட அனைத்து எதிர்க்கட்சிமாநில அரசுகளும் ஒன்றுபட்ட நிலையை எடுத்திட வேண்டும் என்று கேரள நிதியமைச்சர்டி.எம். தாமஸ் ஐசக் கூறினார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எதிர்க்கட்சி மாநில அரசுகளின் நிதியமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டம் திங்கள் அன்று நடைபெற்றது. இதில் பஞ்சாப், தில்லி, சத்திஸ்கர், மேற்கு வங்கம், தெலுங்கானா  ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் கலந்து கொண்டார்கள். கேரள நிதியமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக் தலைமை வகித்தார்.இக்கூட்டத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி தொகையைத் தராமல் இருப்பதுடன், அதற்குப்பதிலாக மாநில அரசுகள் இந்திய ரிசர்வ்வங்கியிடம் கடன் பெற்றுக்கொள்வதற்கு இருவிதமான ஆலோசனைகளைக் கூறியிருந்தது. இவ்விரு ஆலோசனைகளையும் இக்கூட்டம் நிராகரித்தது.

மத்திய நிதியமைச்சரின் ஆலோசனைகளை நிராகரித்த இக்கூட்டம், மாநில அரசுகள் மத்திய அரசிடமிருந்து, ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையைப் பெறத் தகுதியுடையவை என்றும், மேலும் ஒவ்வோராண்டும் ஜிஎஸ்டி தொகையின் அடிப்படை ஆண்டில் 14 சதவீதம் உறுதியளித்தபடி அதிகரித்தும் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.இக்கூட்டம் தொடர்பாக டாக்டர் ஐசக் மேலும் கூறுகையில், மத்திய அரசு கடன் பெற்று, மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை அளித்திட வேண்டும் என்றும் கூட்டத்தில் ஒருமனதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன என்றும் கூறினார்.

மாநிலங்களில் பிரச்சாரம்
“செஸ் நிதி மூலமாக வசூலிக்கப்படும் தொகையிலிருந்தும் மாநிலங்களுக்கு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில்,மத்திய அரசால் கடன் திருப்பி செலுத்தப்படும் வரை, செஸ் வரி வசூல் குறித்தும் தீர்மானித்திட வேண்டும்,” என்றும் தாமஸ் கூறினார்.“ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக எதிர்க்கட்சி நிதியமைச்சர்களின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டை, ஆறு மாநிலங்களின் முதலமைச்சர்களும், பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவிப்பார்கள். இது, இப்பிரச்சனையை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அப்பாலும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்” என்றும் டாக்டர் தாமஸ் ஐசக் கூறினார்.இக்கூட்டம் வீடியோ மாநாடு மூலமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த கட்டம்
மற்றொரு கூட்டம் அடுத்த மூன்று நான்குநாட்களில் நடக்கவிருப்பதாகவும் ஐசக் தெரிவித்தார். மத்திய அரசின் அறிவிப்புகளை முதலில் நிராகரித்தது கேரள மாநில அரசுதான். மத்திய அரசின் முடிவுகள், மாநில அரசுகளுக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தும் என்றுஐசக் கூறினார். மேலும் மத்திய அரசு கூறுவதுபோன்று மாநில அரசுகள் அவற்றினுடைய வருவாயில் 3 சதவீத அளவிற்குத்தான் கடன் பெறமுடியும் என்பதையும் விளக்கினார்.  (ந.நி.)