தில்லி
சீனாவில் உருவான புதிய ஆட்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் அந்நாட்டின் முக்கிய நகரான வுஹானில் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 200-க்கும் அதிகமானோரை உயிரிழக்கச் செய்த இந்த கொரோனா வைரஸ் தற்போது 11-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் அவசர நிலையை அறிவித்துள்ள நிலையில், சீனாவில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க சிறப்பு விமானத்தைத் தலைநகர் தில்லியிருந்து சீனாவின் வுஹான் பகுதிக்கு மத்திய அரசு அனுப்பவுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த சிறப்பு விமானம் போயிங் 747 ஜம்போ ஜெட் ரகத்தைச் சேர்ந்தது. தற்போது மும்பையில் தயார் நிலையில் இருக்கும் இந்த விமானம் தில்லி சென்று சுகாதார அமைச்சகம் தயாராக வைத்துள்ள சிறப்பு மருத்துவக் கருவிகளை வாங்கிக்கொண்டு வுஹான் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று கிளம்பவிருக்கும் இந்த சிறப்பு விமானம் சனியன்று அதிகாலை தில்லி வந்து சேரும். இந்த விமானத்தில் 5 மருத்துவர்களும், ஒரு உதவியாளரும் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.