tamilnadu

img

பாபர் மசூதி இடிப்பை மாணவர்கள் கொண்டாட வைக்கும் கர்நாடகா பள்ளி 

கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் காரர் நடத்தி வரும் பள்ளியில் பாபர் மசூதி இடிப்பை மாணவர்கள் கொண்டாடுவது போல் நாடகம் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
கர்நாடகா மாநிலம் தக்சினா கன்னடா மாநிலத்துள்ளது ஸ்ரீராம வித்யாகேந்திரா உயர் நிலைப்பள்ளி. ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி பிரபாகர் பட்டிற்கு சொந்தமான  அந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா மற்றும் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் பல ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 
அந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வை நடித்து காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 
பாபர் மசூதி படம் பொறிக்கப்பட்ட பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதனை, வெள்ளைச் சட்டை மற்றும் காவி நிற கீழாடை அணிந்திருந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் ஓடிச் சென்று கையில் கிடைத்ததைக் கொண்டு அந்த பேனரைத் தாக்குகின்றனர். பின்னர், ஸ்ரீராமஜெயம், ஜெய்ஹனுமான் என்று கோஷம் எழுப்பினர். பின்னர், பாபர் மசூதியை இடித்த பிறகு நூற்றுக்கணக்கான மாணவர்கள் ராமர் கோயில் போன்ற உருவத்தில் அணிவகுத்து நின்றனர். 
பாபர் மசூதி இடிப்பு குற்றச் செயல் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் ட்விட்டர் பதிவில், ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் 3,800-க்கும் அதிகமானவர்கள் இந்த ராமர் கோயில் உருவத்தைக் கொண்டுவந்துள்ளனர்’ என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை மாணவர்கள் கொண்டாடும் நிகழ்வை கிரண்பேடி தனது பதில் மறைக்க முயன்றது பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.