குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடும் முஸ்லீம்களுக்கு கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ சோமசேகர் ரெட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
மத்திய பாஜக அரசு கடந்த மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அமல்படுத்தியது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பாஜகவினர் இச்சட்டத்திற்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ சோமசேகர் ரெட்டி பங்கேற்று பேசினார். அப்போது அவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடும் முஸ்லீம்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அவர் பேசியபோது, ”குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருபவர்களுக்கு நான் சிறிய எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த தேசத்தில் நாங்கள் 80 சதவீதம் இருக்கிறோம், முஸ்லிம்களாகிய நீங்கள் 18 சதவீதம்தான் இருக்கிறீர்கள். நாங்கள் நினைத்தால் என்ன ஆகும் என்று சற்று சிந்தித்துப்பாருங்கள்” என மிரட்டல் விடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.