சண்டிகர்:
தமிழகத்தின் நடுக்காட்டுப் பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த துயரம் அடங்குவதற்குள், ஹரியானாவில் 5 வயது சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 மணி நேரம் போராடி மீட்டும்,சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் கர்னல் மாவட்டத்தில், உள்ள கிராமம் ஹர்சிங்புரா. ஷிவானி என்ற 5 வயது சிறுமி வீட்டருகே ஞாயிறு மாலை 5.30 மணி அளவில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், நெடுநேரமாக காணாததால் அச்சிறுமியின் தாயார் பதறிப்போய் தேடியுள்ளார்.வீட்டருகே தோண்டப்பட்டு, பயனற்றுப் போனதால் மூடப்படாமல் விட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்திருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப் பட்டு, ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிறுமி இருக்கும் நிலையை அறிய கேமிராவை செலுத்தியபோது கால்கள் மட்டும் தெரிந்துள்ளன. சிறுமி தலைகீழாக விழுந்திருந்த நிலையில், ஆழ்துளைக்கிணறும் குறுகலாக இருந்ததால் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி மீட்க முடிவு செய்யப்பட்டு சிறுமி உள்ளே விழுந்த சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு பணிகள் தொடங்கி யுள்ளன.தீயணைப்பு மற்றும் மீட்புப்படை யை சேர்ந்த வீரர்கள், மருத்துவக் குழுவினர் உதவியுடன் ஆழ்துளைக் கிணற்றுக்குள் தொடர்ந்து ஆக்சிஜனை செலுத்தியுள்ளனர். சிறுமிக்கு தெம்பூட்டும் வகையில்,சிறுமியின் பெற்றோரது குரலை பதிவுசெய்து ஆழ்துளைக் கிணற்றுக்குள் ஒலிக்கச் செய்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, நள்ளிரவுக்குப் பிறகு அவர்களும் மீட்புப் பணியில் இணைந்துள்ளனர்.மீட்பு பணிகள் துவங்கிய 10 மணி நேரத்திற்கு பிறகு, சிறுமி ஷிவானியை மீட்டுள்ளனர். மயக்க நிலையிலிருந்த அந்தச் சிறுமிக்கு உடனடியாக மருத்துவக் குழுவினர் முதலுதவிஅளித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிறுமி ஷிவானி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சிறுமி விழுந்த ஆழ்துளைக் கிணற்றின் விட்டம், என்ன முறையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, பக்கவாட்டில் பள்ளம் தோண்டி சுரங்கம் அமைத்து மீட்டார்களா என்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.