பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில், குமாரசாமி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு, பாஜகவினர் ரூ. 40 கோடி வரை தன்னிடம் பேரம் பேசியதாக, மதச்சார் பற்ற ஜனதாதளம் கட்சியின் எம்எல்ஏ மகாதேவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடை பெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், 104 இடங்களுடன், பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும் 224 இடங்களை கொண்ட பேரவையில், பெரும்பான்மை இடங்கள் அக்கட்சிக்கு கிடைக்காததால், எடியூரப்பாவால் முதல்வராக தொடர முடியவில்லை.
அதைத்தொடர்ந்து, 80 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரசும், 37 இடங்களில் வெற்றிபெற்றிருந்த மதச்சார்பற்ற ஜனதாதளமும் இணைந்து, கூட்டணி அரசை அமைத்தன. மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி முதல்வரானார்.
எனினும், இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு, பாஜக தலைவர் எடியூரப்பாதொடர்ந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் நடக்காமலேயே ஆட்சி மாறும் என்றும் அவர் கூறி வந் தார். அதாவது காங்கிரஸ் - ஜேடிஎஸ் எம்எல்ஏ-க்களை, தங்கள் பக்கம் இழுத்து அதன்மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அவரது திட்டமாக இருந்தது.
அதற்கேற்பவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏ-க்கள் இரண்டுநாட்களுக்கு முன்பு தங்களின் எம்எல்ஏபதவியை ராஜினாமா செய்து, பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால், குமாரசாமி அரசு கவிழும் சூழலும் உருவாகியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, குறுக்கு வழியில் வீழ்த்துவதற்கு, பாஜக முயற்சிப்பதாக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.அதனொரு பகுதியாக, “பாஜக அணிக்கு தாவுவதற்காக, தனக்கு ரூ. 40 கோடி வரை பாஜக தலைவர்கள் பேரம் பேசினார்கள்” என்று மதச்சார்பற்றஜனதாதளம் எம்எல்ஏ மகாதேவ் கூறியுள்ளார். ரூ. 40 கோடியை தனது அறையில் அவர்கள் வைத்துவிட்டுச் செல்ல முயன்றதாகவும், அதற்கு தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ள மகாதேவ், காங்கிரஸ் எம்எல்ஏ ஜர்கிஹோலி ரூ. 80 கோடி தந்தால், பாஜகவுக்கு தாவுவதற்கு தயார் என்று பேரம்பேசியதையும் அம்பலப்படுத்தியுள்ளார்.மகாதேவ் கூறிய காங்கிரஸ் எம்எல்ஏ ஜர்கிஹோலி, தற்போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.