சண்டிகர்:
அரியானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மகேந்திரஹர்க்கில் நடைபெறும் பேரணியில் சோனியாவுக்குப் பதிலாக ராகுல்காந்தி உரையாற்றுவார் என்று காங்கிரஸ் கட்சிசார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியானா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, இரு மாநிலங்களிலும் அனல் பறக்கும்பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில், அரியானா மாநிலத்தில் மகேந்திரஹர்க் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திதலைமையில் ஒரு மாபெரும் பேரணி நடைபெறும் என்று அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பேரணியில் சோனியா காந்தி உரையாற்ற மாட்டார் என்று அக்கட்சியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவுக் காரணமாக அவர் இந்தத் தேர்தல் பேரணியில் உரையாற்ற முடியாது என்றும் அவருக்கு பதிலாக ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.