நாகர்கோவில், ஏப்.1-
குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் 19 சிறப்பு வார்டில் நோய்த்தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் குமரி மாவட்டத்தில் கோவிட் 19 உறுதிசெய்யப்பட்ட 5 பேர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் தேவையான பணியாளர்கள் மட்டும் வேலைக்கு வந்தால் போதும் மற்றவர்கள் வரவேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதனால் மருத்துவ பணியாளர்கள் மட்டும் வந்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலகம் சார்பில் அலுவலக பணியாளர்களும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதனன்று பணிக்கு வந்த மருத்துவமனை அலுவலக பணியாளர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட எந்த பலன்களும் எங்களுக்கு கிடையாது. எனினும் எங்களை வலுக்கட்டாயமாக வேலைக்கு வர சொல்கின்றனர் என கூறி வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவிக்க போவதாக அவர்கள் கூறினர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் கோவிட் 19 வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் வேலை பார்ப்பவர்களுக்கு சில விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. அதன்படி அவசர வேலைகளுக்கு மட்டுமே வந்தால் போதும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதனால் களியக்காவிளை, மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் இருந்து மருத்துவ பணியாளர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைவரும் பணிக்கு வந்துள்ளனர். எனவே மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் அலுவலகப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக மருத்துவமனை முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வழங்க உள்ளோம் என கூறினர்.