tamilnadu

img

சாதிய வன்ம காவல் ஆய்வாளர்களை கண்டித்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் விஜயகுமார், வரஞ்சரம் உதவி ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் புது உச்சிமேட்டைச் சேர்ந்த தலித் இளைஞர்களான ஜோதிபாசு, கண்ணதாசன் ஆகியோரை சாதியவன்மத்தோடும், அதிகார அத்துமீறலோடும் வீட்டுக்குள் புகுந்து தாக்கி காவல் நிலையத்திலேயே பாலியல் அத்துமீறல் செய்ய முயன்றதைக் கண்டித்தும், மேற்படிகாவலர்கள் மீது தலித் வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஜோதிபாசு, கண்ணதாசன் மீதான பொய் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் வெள்ளியன்று (பிப். 28) நடைபெற்றது.

காவல்துறையின் தடையை மீறிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். காவல் துறையினர் அனைவரையும் முரட்டுத்தனமாக இழுத்துச் சென்று கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதில் பெண் ஒருவருக்குகாலில் காயம் ஏற்பட்டது. பின்னர்,முன்னணியின் தலைவர்களுடன் காவல் துணை கண்காணிப்பாளர்கள் ராமநாதன், மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கள்ளக்குறிச்சி சார் ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் சென்றனர். அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், துணைத்தலைவர் ஜி.ஆனந்தன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை ஆகியோர் சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், ஆய்வாளர் விஜயகுமார், உதவி ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் மீது தற்காலிகபணிநீக்கம் உள்ளிட்ட துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,வழக்குப் பதிவு செய்ய வேண்டும், ஜோதிபாசு, கண்ணதாசன் ஆகியோர் மீது போட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும், தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தலித் மக்கள் மீது காவல் துறையினர் நடத்தும் சாதியரீதியான தாக்குதல்களை தடுத்துநிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாகசார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதில் துணை பொதுச்செயலாளர்கள் எம்.கந்தசாமி, ப.செல்வன்,  மாநிலச் செயலாளர்கள் பி.வாஞ்சிநாதன், ஏ.சங்கரன், மாவட்டத் தலைவர் வி.ராஜா, செயலாளர் ஆர்.பூமாலை, பொருளாளர் பி.தெய்வீகன்  உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.