1895 - ஜப்பான் ஆக்கிர மித்ததைத் தொடர்ந்து, ஐந்து மாதங்கள்(152 நாட்கள்!) மட்டுமே இருந்த ஃபார்மோசா குடியரசு முடிவுக்கு வந்தது. ஃபார்மோசா என்பது தைவானுக்கு போர்ச்சுகீசியர்கள் சூட்டிய பெயர். 1542இல் தங்கள் வரைபடத்தில் இல்லாத இந்தத் தீவைக் கண்ட போர்ச்சுகீசிய மாலுமிகள், போர்ச்சுகீசிய மொழியில் அழகான தீவு என்ற பொருளுள்ள ஃபோர்மோசா என்ற பெயரைச் சூட்டினர். சுமார் ஒன்றேகால் லட்சம் ஆண்டுகளுக்குமுன், சீனாவுடன் இணைந்தே இருந்த இப்பகுதி, பத்தாயிரம் ஆண்டுகளுக்குமுன் கடல்மட்டம் உயர்ந்தபோதுதான் தீவாகியது. இத்தீவில் ஆறாயிரம் ஆண்டுகளுக்குமுன் குடியேறிய (பெரும்பாலும் சீன) விவசாயிகளே, தற்போது தைவானின் தொல்குடியினராக அறியப்படுவோரின் மூதாதையராவர்.
இந்தத் தொல்குடியினரின் மொழியில் அவர்களது பெயரான தாய்வோன் என்பதிலிருந்துதான் தற்போதைய பெயரான தைவான் உருவானது. சீனாவின் ஆளுகையின்கீழிருந்த இப்பகுதியில் 1624இல் டச்சுக்காரர்களும், 1626இல் ஸ்பானியர்களும் காலூன்றினாலும், மிங் மரபின் வீழ்ச்சிக்குப்பின் 1662இல் வெளியேற்றப்பட்டு, டுங்னிங் முடியரசு உருவாக்கப்பட்டது. 1683இல் இதை வென்ற சீனா, மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொண்டது. முதல் சீன-ஜப்பானியப்போரில்(1894-95) சீனா தோற்றதையடுத்து, (போரின் பெரும்பகுதி சீனாவின் வடபகுதியில் நடந்திருந்தாலும், தென்பகுதியிலிருந்த) தைவானை விட்டுத்தரவேண்டும் என்று வற்புறுத்தி ஜப்பான் பெற்றுக்கொண்டது. இம்மக்கள் ஜப்பானின் ஆளுகையை ஏற்க விரும்பாததால், 1895 மே 23இல் ஃபார்மோசா குடியரசு என்ற சுதந்திர நாடு உருவானதாக அறிவித்தனர். ஒரு வாரம் மட்டுமே பிரச்சினையின்றி செயல்பட்ட இந்த அரசு, அதற்குள் நாட்டின் கொடி, அஞ்சல்தலைகள், காகித நாணயம் உள்ளிட்டவற்றை வெளியிட்டுவிட்டது.
அப்போது தாக்கத் தொடங்கிய ஜப்பான், அக்டோபர் 21இல் தலைநகரைக் கைப்பற்றியதுடன், இக்குடியரசு முடிவுக்கு வந்தது. 1912இல் சீனாவின் முடியாட்சி முடிவுக்கு வந்து சீனக் குடியரசு உருவானது. 1945இல் இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்தபோது, தைவான் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. 1949இல் மா-சேதுங் தலைமையிலான பொதுவுடைமை இயக்கம் சீனாவின் ஆட்சியைக் கைப்பற்ற, கொமிங்டாங் கட்சியின் ஆளுகையிலிருந்த சீனக்குடியரசு முடிவுக்கு வந்து, சீன மக்கள் குடியரசு(மக்கள் சீனம்) உருவானது. அங்கிருந்த தப்பி தைவானுக்கு வந்த ஓடிய சியாங் கை-ஷேக்கும், அவர் ஆதரவாளர்களும், (சீனாவையும் உள்ளடக்கிய!) அவர்களது சீனக் குடியரசின் தற்காலிகத் தலைநகரம் என்று அழைத்துக்கொண்டனர். மீண்டும் மக்கள்சீனத்தை அவர்களால் நெருங்கவே முடியாமற்போனலும், இன்றுவரை தைவான் தன்னை சீனக் குடியரசு என்றே அழைத்துக்கொள்கிறது!