tamilnadu

img

காஷ்மீர் விவகாரம் டிரம்பிடம் உதவி கேட்ட மோடி- நாடாளுமன்றத்தில் அமளி

காஷ்மீர் விவகாரத்தில் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பிடம்  உதவி கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையில் டிரம்பை இம்ரான் கான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இரு நாட்டு உறவுகள் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், தீவரவாத நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் டிரம்ப் கூறினார். மேலும், காஷ்மீர்விவகாரம்  குறித்து பேசிய டிரம்ப், அழகான அந்த இடம் தற்போது யுத்த களமாகியுள்ளது.அதனால்  அங்கு அமைதி திரும்ப தான் உதவ தயார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இரண்டு வாரங்களுக்கு முன்பு தன்னை சந்தித்த பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் சமரசம் செய்யுமாறு தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார் . இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநிலங்களவையில் இதுகுறித்து விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய  அமெரிக்காவை இந்தியா கேட்கவில்லை என விளக்கம் அளித்தார். அமெரிக்க அதிபர் டிரம்பிடம் மோடி அதுபோல் எந்த கோரிக்கையும் வைக்க வில்லை என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.