முறைகேடு புகார்களையடுத்து, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்வதற்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. கடந்த மார்ச் 31 வரை மட்டுமே பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்கும் காலக்கெடு கொடுக்கப்பட்டு இருந்தது. ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களை மட்டுமே விற்பனை செய்வது கட்டாயமானது. இந்த நிலையில், பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்ட பல லட்சம் வாகனங்கள் விற்பனையாகாமல் டீலர்களிலும், கார் தயாரிப்பு ஆலைகளின் யார்டுகளிலும் தேங்கின. மேலும், மார்ச் இறுதி வாரத்தில் கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால், வாகன விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, இருப்பில் தேங்கிய பல லட்சம் பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு அனுமதி கோரி இந்திய வாகன விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்த உச்சநீதிமன்றம், கொரோனா லாக் டவுன் காலத்தில் ஏற்பட்ட விற்பனை இழப்பை கருத்தில் கொண்டு சிறிய தளர்வு கொடுத்தது. அதாவது, இருப்பில் தேங்கி இருக்கும் 10 சதவீத வாகனங்களை மட்டும் 10 நாட்களில் விற்பனை செய்து பதிவு செய்வதற்கு அனுமதித்தது. இந்த உத்தரவு வந்தவுடன் வாகன டீலர்கள் சரமாரியாக இருப்பில் இருந்த பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.
இதனால், உச்சநீதிமன்றம் அனுமதித்ததைவிட இரு மடங்கு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கடும் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம், உத்தரவை மதிக்காமல் செயல்பட்டது குறித்து டீலர் கூட்டமைப்புக்கு கடும் அதிருப்தியை தெரிவித்தது.
மேலும், கடந்த ஏப்ரல் 1க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட பிஎஸ்-4 வாகனங்கள் குறித்தும் தரவுகளை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த தரவுகளை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, "கோர்ட் உத்தரவை மதிக்காமல் அதிக அளவில் பிஎஸ்-4 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறித்து கடும் அதிருப்தியை பதிவு செய்தார். மேலும், வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் பிஎஸ்-4 வாகனங்கள் லாக் டவுன் காலத்தில் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பிஎஸ்-4 வாகனங்களை பதிவு செய்வதற்கு அதிரடியாக தடை விதித்தார். அத்துடன், வரும் ஆகஸ்ட் 13ந் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். டீலர்கள் கோர்ட் உத்தரவை மீறி பிஎஸ்-4 வாகனங்களை கணிசமாக விற்பனை செய்துள்ளனர். இதனால், கடந்த ஏப்ரல் 1க்கு பிறகு பிஎஸ்-4 வாகனங்களை வாங்கியோர் பீதியில் உள்ளனர். அடுத்து உச்சநீதிமன்றம் என்ன உத்தரவு போடுமோ என்ற குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.