அமெரிக்க ஜனாதிபதி, டொனால்ட் டிரம்ப், இந்தியாவிற்கு பிப்ரவரி 24-25 தேதிகளில் வருகிறார். அமெரிக்காவும், இந்தியாவும் சிறப்பானதொரு உறவினைப் பெற்றிருப்பதாக, பிரதமர் மோடி கூறிக்கொண்டிருக்கிறார். மேலும் அமெரிக்க ஜனாதிபதியின் இந்தப் பயணம் இரு நாடுகளின் உறவுகளில் இந்தியாவிற்கு மேலும் ஆதாயத்தை அளித்திடும் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால், உண்மை நிலைமைகளுக்கும் மோடியின் கூற்றுகளுக்கும் சம்பந்தமே இல்லை. உண்மையில், டிரம்பின் பயணத்திற்கு சில வாரங்களுக்கு முன்புதான், அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகளைப் பெற்றிருந்த சிறப்பு மற்றும் முன்னிரிமை அந்தஸ்து நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா கழற்றிவிடப்பட்டிருக்கிறது. டிரம்ப் வருகையின் உண்மையான நோக்கம், இந்தியாவின் சந்தையைக் கைப்பற்றுவதேயாகும். அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு மேலும் உதவிகள் செய்யக்கூடிய விதத்தில் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கச் செய்திட இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிப்பதேயாகும். இந்திய அரசும், அமெரிக்கா விதித்திடும் நிர்ப்பந்தங்களையும், நிபந்தனைகளையும் ஏற்கும் மனநிலையிலேயே இருந்து வருகிறது. ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி மற்றும் எல்ஐசி போன்ற நிதித்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திட மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளே இதற்கான சமீபத்திய சில உதாரணங்களாகும். டிரம்ப், சிறுபான்மையினரையும், புலம்பெயர்ந்தோரையும் இழிவுபடுத்தும்விதத்தில் வெறுப்பு அரசியலையும், இனவெறி-மதவெறி அரசியலையும் விரும்பக்கூடிய நபர். இத்துடன் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராகவும், சுற்றுச்சூழல் பாதிக்கக்கூடிய விதத்திலும் அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச்செல்லும் நபருமாவார். டிரம்பின் வருகையால் இந்தியாவிற்குக் கிடைக்கப் போவது எதுவுமில்லை. மாறாக இழக்கப்போவதோ அதிகமாகும். மேலும், போரை விரும்பும் டிரம்பின் அயல்துறைக் கொள்கையானது பாலஸ்தீனம், ஈரான், இராக், சிரியா, வெனிசுலா, பொலிவியா போன்ற பல நாடுகளுக்கு சொல்லொண்ணா துன்பத்தை அளித்திருக்கிறது. எனவே, டிரம்பின் வருகையை நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்குக் குழுக்களும் ஒன்றிணைத்து எதிர்க்க்க்கூடிய விதத்தில் அணிதிரள வேண்டியது அவசியமாகும்.
டிரம்பின் வருகையை நாம் எதிர்ப்பதற்கான காரணங்கள்
1 இந்தியாவின் வேளாண்மையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
இந்தியா, அமெரிக்காவின் வேளாண்-வணிக நிறுவனங்களுக்கான மிகப்பெரிய சந்தையாகும். பாதாம்பருப்பு, வாதுமைக் கொட்டை (வால்நட்), முந்திரிப் பருப்பு, கொண்டக்கடலை, ஆப்பிள், கோதுமை, சோயாபீன், பட்டாணி போன்ற உற்பத்திப் பொருள்களுக்கான மிகப்பெரிய சந்தையாகும். அமெரிக்க அரசாங்கத்தால் அதன் வேளாண் வணிக கார்ப்பரேட்டுகளுக்கு வளர்முக நாடுகளின் விவசாயத்தைக் கபளீகரம் செய்வதற்கேற்றவிதத்தில், வளர்முக நாடுகளின் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக்கூடிய விதத்தில் விலைகளைச் சிதைப்பதற்கு வழிவகுக்கும் விதத்தில் மிகப்பெரிய அளவிற்கு பட்ஜெட் ஒதுக்கீடுகளும், மான்யங்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன. 2019 அமெரிக்க பண்ணை சட்டமுன்வடிவு ஒதுக்கீடு சுமார் 867 பில்லியன் டாலர்களாகும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 69 ஆயிரம் கோடி ரூபாய்களாகும். விவசாயப் பொருள்கள் அதீதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டால் இந்திய விவசாயிகளின் நலன்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால், இந்தியா இப்பொருள்களுக்கு வரி விதிக்கும் முறையைக் கடைப்பிடித்து வருகிறது. இத்தகைய வரிவிதிப்புக் கொள்கையை நீக்கிட வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம், இந்தியாவை வற்புறுத்தி வருகிறது. அதேபோன்று அமெரிக்கா இந்தியாவின் கால்நடை, பால்பண்ணைத் தொழில்கள் மற்றும் கோழி வளர்ப்புத் துறைகள் மீதும் குறி வைத்திருக்கிறது. இவற்றில் நாட்டில் சுமார் 10 கோடிக்கும் மேலான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இணைத்துக்கொண்டிருக்கின்றன. இவற்றையும் அமெரிக்க கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்வதற்காக இந்திய அரசைக் கட்டாயப்படுத்துவதற்காகத்தான் டிரம்ப் வருகிறார். அமெரிக்காவிலிருந்து மானிய விலையில் வேளாண் பொருட்களை மேலும் இறக்குமதி செய்திடக் கூடாது என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம், இந்திய விவசாய இயக்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு போன்று விவசாய சங்கங்கள் பல, ஏற்கனவே இந்திய அரசாங்கத்திற்குக் கடிதங்கள் எழுதியிருக்கின்றன.
2 சுகாதாரப் பாதுகாப்பு அரித்து வீழ்த்தப்பட இருக்கிறது
உலக அளவில் ஒப்பிட்டோமானால் இந்தியாவில் இன்றைக்கும் பல மருந்துப்பொருள்கள் மக்கள் வாங்கக்கூடிய விதத்தில் மலிவான விலைக்கு உற்பத்தி செய்யப்பட்டு அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ‘இந்திய காப்புரிமைச் சட்டம் (Indian Patent Act) பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாகத்தான் எச்ஐவி, காசநோய் மற்றும் புற்றுநோய் முதலியவற்றிற்கான மருந்துகள் இப்போதும் மக்கள் வாங்கக்கூடிய விதத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன. டிரம்பின் வருகையின்போது, அமெரிக்க மருந்துக் கம்பெனிகளின் நலன்களைப் பாதுகாக்கக்கூடிய விதத்தில் இந்திய சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவர நிர்ப்பந்தம் அளிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே இதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் இந்தியாவின் மருத்துவ உபகரணங்கள் மீது விலைக் கட்டுப்பாடுகள் விதித்துள்ள இந்தியாவின் முற்போக்குக் கொள்கையை ஒழித்துக் கட்டவும் அமெரிக்கா குறி வைத்திருக்கிறது. இவற்றிற்கு இந்திய அரசு செவிசாய்க்குமானால் மக்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க முடியாத நிலை உருவாகும். அமெரிக்க நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தில்தான் இவற்றை இந்திய மக்களும் உலக மக்களும் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
3 இ-வணிகத்தின் மீது அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் நிகழ்ச்சிநிரல்
உலக வர்த்தக அமைப்பின் கீழ் சர்வதேச டிஜிட்டல் வர்த்தகத்தைக் கொண்டுவர வளர்முக நாடுகள் அனைத்தும் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்து வருகிறது. இ-வணிகம் என்று அழைக்கப்படும் இதன் மூலம் உலகத்தின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றுகொண்டிருக்கிறது. எல்லை தாண்டிய விதத்தில் தரவுகளை எவ்வித இழப்பீடுகளும் அளிக்காமல் பதிவிறக்கம் செய்து கொள்வது, இ-கையொப்பங்கள் தொடர்பாகவுள்ள அமெரிக்க சட்டங்களை விரிவாக்குவது, உள்ளூர் அரசாங்கங்கள் தலையிடுவதற்குத் தடை போன்றவை மக்களின் நலன்களுக்கு டிஜிட்டல் வளர்ச்சியை உத்தரவாதப்படுத்துவதற்கான நம்முடைய திறமைகளில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திடும். அமேசான் மற்றும் கூகுள் போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்கைகளின் அடிப்படையில் இந்த விதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு இந்தியாவில் எவ்விதமான இடைஞ்சலும் அளிக்கக் கூடாது என்று டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது. இவர்கள் விரும்புவது போன்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால் அது, வரவிருக்கும் காலங்களில் இந்தியாவின் பொருளாதாரத்தின் மீது மிகப்பெரிய அளவில் நாசத்தை ஏற்படுத்திடும். இது விவசாயிகளையும், வர்த்தகர்களையும், தொழிலாளர்களையும் மேலும் கடுமையான முறையில் பாதிப்புகளுக்கு உள்ளாக்கிடும்.
4 உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவையும், வளர்முக நாடுகளையும் அடக்கி வைத்தல்
உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவை ஒரு கட்டுக்குள் வைத்திட அமெரிக்கா பல்வேறு காரணங்களுக்காக குறிவைத்திருக்கிறது. பொது பங்குதாரர் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலைகள் (public stockholding and Minimum Support Prices (MSP)) தொடர்பான இந்தியாவின் கொள்கைகளை அது விரும்பவில்லை. ஏழைகளுக்கு உணவு அளிப்பதை உத்தரவாதப்படுத்திடும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துதல்; விவசாயிகளுக்கு, வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை கொடுப்பது போன்ற இந்தியாவின் கொள்கைகளை அது விரும்பவில்லை. உள்நாட்டு சூரிய ஒளித் தகடுகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார் தொழிற்கூடங்களுககு மானியங்கள் வழங்குவது தொடர்பாக இந்தியாவை உலக வர்த்தக அமைப்பு நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறது. இந்தியாவையும், இதர வளர்முக நாடுகளையும் உலக வர்த்தக அமைப்பின் கீழான வளர்முக நாடுகள் என்று வகைப்படுத்தக்கூடாது என்று டிரம்ப்பின் அமெரிக்கா கூறிக்கொண்டிருக்கிறது. இவை பறிக்கப்பட்டால் இந்நாடுகளுக்கு அளிக்கப்பட்டுவரும் சிறப்பு அந்தஸ்துகள் சூறையாடப்பட்டுவிடும். மேலும் உலக வர்த்தக அமைப்பின் மேன்முறையீட்டு அமைப்பை, அமெரிக்காவிற்கு எதிராக தீர்ப்புகள் வழங்குவதால், அதனை ஒழித்துக்கட்டவும் அமெரிக்கா விரும்புகிறது.
5 புவிவெப்பமயமாதல் நெருக்கடி மேலும் அதிகமாகிறது
டிரம்ப், புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு எதிரானவர். சரியாகச் சொல்வதென்றால், புவி வெப்பமய மாதல் தொடர்பாக ஐ.நா.கன்வென்ஷனின் பாரீஸ் ஒப்பந்தத்தி லிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டதற்கான நடைமுறையை அவர்கள் தொடங்கி வைத்தார். உலகில் புவிவெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக விளங்கும் கார்ப்பரேட் கழிவு வாயுக்களை (greenhouse gases) உமிழ்தலை அதிக அளவில் மேற்கொள்வது அமெரிக்காவேயாகும். எனவே, புவிவெப்பமயமாதலுக்கு எதிராக நடவடிக்கைகளுக்காக பசுமை காலநிலை நிதியத்திற்கு (Green Climate Fund) அமெரிக்கா அளிக்க வேண்டிய பங்கினை அளிக்க மறுப்பதோடு மட்டுமல்லா மல், இதற்காக இந்தியா கோரும் அந்நிய உதவிக்காக இந்தியா மீது தாக்குதலையும் தொடுத்துக்கொண்டி ருக்கிறது. எனினும், துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவின் கொடுமைகளை எதிர்த்திட மோடி அரசாங்கம் மறுத்து வருகிறது.
6 உற்பத்திப் பிரிவுகள் மற்றும் முதலீட்டுக் கொள்கைகளில் தாக்குதல்
டிரம்ப் நிர்வாகம், இந்தியா உட்பட வளர்முக நாடுகளிடமிருந்து உருக்கு மற்றும் அலுமினியம் இறக்குமதி செய்வதன் மீது ஒருதலைப்பட்சமாக சுங்க வரி விதித்திருக்கிறது. இதன் விளைவாக இந்தியாவின் உருக்கு ஏற்றுமதி கடந்த 12 மாதங்களில் 46 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. 2020 ஜனவரியில், அமெரிக்காவின் சுங்கவரி விதிப்பு மின் கம்பிகள் மற்றும் ஆட்டோமோபைல்ஸ் மற்றும் டிராக்டர்களுக்கும் விரிவாக்கப்பட்டிருக்கின்றன. 2019 மே மாதத்தில் அமெரிக்கா மேற்கொண்ட இந்தியாவிற்கு அளித்துவந்த வர்த்தக முன்னுரிமைகளை விலக்கிக் கொண்டதால் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆட்டோ பொருள் களின் ஏற்றுமதியிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. மேலும் இந்தியாவில் இன்சூரன்ஸ் மற்றும் வங்கித்துறைகளில் அந்நிய முதலீடுகளுக்கு இருந்துவரும் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்கா குறியாக இருக்கிறது. டிரம்ப் தூதுக்குழுவின் வருகையின் நோக்கங்களில் இக்கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
7 பெண்கள் உரிமைகள் மீதான தாக்குதல்
டிரம்ப் நிர்வாகம், அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் பெண்களின் பாலியல் மற்றும் மறுஉற்பத்தி உரிமைகளை (sexual and reproductive rights) அரித்து வீழ்த்துவதைத் திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறது. கருச்சிதைவு உட்பட தாய்மார்களின் மருத்துவக்கவனிப்பு க்காக அளித்து உதவிகள் அளித்துவரும் அமைப்புகளுக்கு நிதி அளிப்பதைக் கைவிட்டுவிட்டது. இதன் விளைவாக, பெண்கள், குறிப்பாக ஏழைப் பெண்கள், சுகாதாரக் கவனிப்பு என்னும் அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள நிலை ஏற்பட்டிருக்கிறது. டிரம்ப்பும் பெண்கள், தங்கள் வாழ்க்கைத்துணைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமைகள் அளிக்கப்படுவதை மறுப்பவர்தான். தங்கள் வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமைகளையோ அல்லது எதிர்காலம் குறித்து சுயமாக முடிவுகள் மேற்கொள்வதற்கான உரிமைகளையோ பெண்களுக்கு அளிக்கக்கூடாது என்று நினைக்கின்ற ஆண் ஆதிக்க, பெண்ணின வெறுப்பு மனப்பான்மை உள்ள ஒரு பேர்வழிதான்.
8 அமைதி மற்றும் பாதுகாப்பு மீதான தாக்குதல்
இந்தியா தன்னுடைய ராணுவத் தேவைகளுக்கு முழுமையாகத் தங்களைச் சார்ந்திருக்க வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது. அந்த அடிப்படையில் தேவையான நிர்ப்பந்தங்களை அளித்தும் வருகிறது. அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களின் விளைவாகத்தான், இந்தியா ராணுவ உற்பத்தித் தொழில் பிரிவுகளில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது. மேலும் ரஷ்யாவிடமிருந்து மிகவும் முன்னேறிய ஏவுகணை பாதுகாப்பு முறையான எஸ்-400 ஏவுகணை களை வாங்கினால் பொருளாதாரத் தடை விதிப்போம் என்று இந்தியாவை மிரட்டிக்கொண்டுமிருக்கிறது. தற்போதைய டிரம்பின் வருகையின்போதுகூட, அமெரிக்காவின் ஆயுதங்களை வாங்குவதற்கும் இந்தியா, மேலும் அதிகமான அளவில் அமெரிக்காவைச் சார்ந்திருப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன. இவை அனைத்தும் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் மிகவும் ஆபத்தானவை களாகும். டிரம்பின் ஆட்சியின்கீழ் உலகம் அணு ஆயுத யுத்த அபாயம் உக்கிரம் அடைந்திருக்கிறது. ஈரான் ஜெனரல் காசிம் சாலிமனியை (Qassem Soleimani) படுகொலை செய்ததன் மூலம் அமெரிக்கா, மேற்கு ஆசியாவை மற்றுமொரு பேரழிவுப் போரின் விளிம்புக்குக் கொண்டுவந்திருக்கிறது. பாலஸ்தீனத்தில், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை ஆதரிப்பதைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தோ-பசிபிக் ராணுவ சூழ்ச்சி நடவடிக்கைகள் காரணமாகவும், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பப் போர் மூலமாகவும் சீனாவை ஆத்திரமூட்டும் விதத்தில் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்காவில் பொலிவியாவிலும், வெனிசுலாவிலும் ராணுவ சதி நட வடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இவற்றின் விளைவாக, டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின்னர் அமெரிக்கா வின் ராணுவச் செலவினங்கள் அதிகரித்திருக்கின்றன. இன்றைய தினம் அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட் உலகில் மிக அதிகமாக உள்ள ஒன்று என்பது மட்டுமல்லாமல், அதனை அடுத்துள்ள 11 நாடுகளின் ஒட்டுமொத்த செலவினத்தையும்விட அதிகமாகும்.
9 பாலஸ்தீனம், கியூபா, ஈரான் மற்றும் வெனிசுலா மக்களுடன் ஒருமைப்பாடு
டிரம்ப் ஆட்சியானது, பாலஸ்தீனம், கியூபா, வெனிசுலா மற்றும் ஈரான் மீதான தாக்குதல்களை உக்கிரப்படுத்தி இருக்கிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். வெனிசுலாவிற்கு அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையின் விளைவாக 2017க்கும் 2018க்கும் இடையே அந்நாட்டு மக்க ளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திரு க்கின்றனர் என்று ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. இதேபோன்றே கியூபா மற்றும் ஈரான் மக்களுக்கும் பல்வேறு வடிவங்களில் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.
10 வலதுசாரி எதேச்சாதிகார ஆட்சிகள் உலக அளவில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்
நிறவெறி, பிராந்தியவெறி மற்றும் மதவெறி ஆகியவற்றின் அடிப்படையில் சிறுபான்மையினர் மீது வலதுசாரித் தாக்குதல்களைத் தொடுப்பதில் டிரம்ப் முன்னணியில் இருந்து வருகிறார். உலகில் இஸ்ரேல், இங்கிலாந்து, இந்தியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், துருக்கி ஆகிய நாடுகளில் ஆட்சியில் உள்ள இந்த வலதுசாரி சக்திகள், தங்களுக்குள் மிகவும் நெருக்கமாகப் பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. இதற்கு இந்தியா, நிறவெறியனான பிரேசிலிய ஜனாதிபதி பொல்சானரோவை குடியரசுதின அணிவகுப்புக்கு வரவழைத்திருந்தது சரியான எடுத்துக்காட்டாகும். இவர்கள் தங்கள் நாடுகளில் சிறுபான்மையினர் மீது ஏவிடும் தாக்குதல்களை ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். எனவேதான், ‘டிரம்ப் திரும்பிப் போ’ முழக்கம் அவசியமாகிறது.
- தமிழில்: ச. வீரமணி