tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்... பிப்ரவரி 19

தமிழ் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள்

உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே. சாமி நாத ஐயர், உழைத்திராவிட்டால் தமிழுல கிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயி ருக்கும். அகநானூற்றிற்கும் புறநானூற்றிற்கும் வேறு பாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். மேலும், தன்னுடைய சொத்துக் களையும் விற்று பல தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பித்தார். இத்தகைய அரிய சேவைக்காக அவ ரின் சீரிய முயற்சிகள் தாராளம், பட்ட சிரமங்களோ ஏராளம். இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடு பட்டு வெற்றியும் கண்டார்.

சங்க இலக்கியங்களைப்பற்றி இன்று நம்மால் பேசமுடிவதற்கு உ.வே.சா பெரும் காரணமாவார். சங்க கால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிய இவரு டைய உழைப்புப் பெரிதும் உதவியது. இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளை பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும் சொற்களை யும் கண்டு முழுப்பொருள் விளங்கும்படி செய்தார். ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளை யும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களை குறித்த முழு புரிதலுக்கும் வழிவகுத்தார். அவர் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் பெரிய வேறுபாடுள்ளது.

சீவகசிந்தாமணியைக் கற்றுக் கொடுக்கமுயன்ற போது ஏட்டுச்சுவடியிலிருந்த நூலை மிகுந்த சிர மத்திற்கிடையில் கற்று பாடம் சொல்லிக் கொடுத்த தால் இந்த நூலில் உள்ள செய்திகளை உணர்ந்தவர், இந்த நூலை 1887 -ஆம் ஆண்டு முதன்முதலாக வெளி யிட்டாா். தமிழர்கள் அளித்த நல்லூக்கம் இப்பணியை அவர் தொடர்ந்து செய்ய காரணமாயிற்று. இவரு டைய வாழ்க்கை வரலாறு தமிழ்பால் அன்பு கொண்ட அனைவரும் போற்றும் ஒரு கருத்துக்கருவூலமாக இருக்கின்றது. இவர் குடும்பம் தீராத வறுமையில் வாடியது. தமது குடும்பம் பிழைப்பதற்கும் இவர் கல்வி கற்பதற்கும் இவரது தந்தை மிகுந்த முயற்சி எடுத்துள்ளார். அக்காலத் தில் இவரது குடும்பம் ஒரு ஊரில் நிலையாகத் தங்கு வதற்கு வசதியில்லாமல் ஊர்ஊராக இடம்பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடியலைந்துள்ள போதிலும், மனம் தளராமல், இவ்வளவு கடினமான சூழ்நிலையில் தமிழை விடாமுயற்சியுடன் கற்றுக்கொண்டுள்ளார். இவர் பிற்காலத்தில் அடைந்த இமாலய வெற்றிக்கு இவர் கற்ற கல்வியும், குடும்பத்தின் தியாகமும், விடா முயற்சியும் பெரும் அடித்தளமாக அமைந்தது.

பெரணமல்லூர் சேகரன்