tamilnadu

img

எங்கே செல்கிறது என் தேசம்? - த.பூங்குழலி

பன்முகத்தன்மை  கொண்டது  எங்கள்  தேசம்  என்று  பலரிடம்  பெருமிதம்  பேசியது  நினைவுக்கு  வருகிறது. “இமயம் முதல் குமரி  வரை  மாறுபட்ட  கலாச்சாரமும் ,பழக்கவழக்கங்களும்  கொண்ட 28  மாநில மற்றும் 6  ஒன்றியப் பிரதேச  மக்களை  இத்தனை  ஆண்டுகள்  இணைத்திருக்கும்  சக்தி எது?”  என்று,  இந்தியா  முழுவதும்  சுற்றுப்பயணம்  முடித்துவிட்டு  வந்த ஒரு  அமெரிக்க  நண்பர்  என்னிடம்  வினவினார்.  நான்  மிகுந்த  பெருமையோடு அவரிடம் சொன்னேன், “ எங்கள் நாட்டில்  உள்ள  அனைத்து  மாநில  மக்களின்  கலாச்சாரத்தையும், அவர்களின்  மொழிகளையும்  சமமாக  மதிக்கும் மாண்புள்ள மக்களின் சகோதரத்துவ, சமத்துவ பார்வையே, இன்று வரை மட்டுமல்ல இன்னும் ஆயிரம் 
ஆண்டுகளுக்கும்  எங்கள் நாட்டு மக்களை இணைக்கும் மகா சக்தி” என்றேன். என் இந்திய நாட்டின் பெருமைகள்  ஏராளம், அதில்
மிகவும் முக்கியமானது  அதன் ஜனநாயகம் என்றும் அந்த நண்பரிடம் கூறினேன். பல மேற்குலக நாட்டு மக்களும் இந்தியாவின் 
பன்முகத்தன்மையையும், மதச்சார்பின்மையையும் வியந்து பாராட்டிட 
கேட்டு  மகிழ்ந்திருக்கிறேன்.

இந்திய  நாட்டில் பெரும்பான்மையாக இந்து  மதம் என்ற ஒற்றை பொது  குடையின் கீழ்  சைவம், கௌமாரம், வைணவம், காணபத்தியம், சௌரம், சாக்தம் ஆகிய சமயங்களை  பின்பற்றும்  மக்கள் வசித்தாலும், ஏனைய சிறுபான்மை மதம் சார்  மக்களை  சகோதரர்களாக  மதிக்கும், மாண்புள்ள மக்களே இந்திய தாயின் அணிகலன்கள். இந்தியாவின்  ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும்,  மதச்சார்பின்மையையும்   நேசிக்கும்  மக்கள் ஏராளம். சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் இந்திய ஜனநாயகத்தின்  முக்கியத்துவம்  குறித்தும், மதங்கள் குறித்தும், மத அடிப்படை வாதிகளால்  ஜனநாயகத்திற்கு ஏற்படும் இழுக்கு குறித்தும், என் கல்லூரி நண்பர்களோடு கட்சி  சார்பின்றி, மத வேற்றுமைகளை கடந்து கலந்துரையாடிய தருணங்கள் என் மனதில்  இன்றும் பசுமையாய் இருக்கிறது.

ஆனால்  கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக நானும், என்னைப் போல் பலரும் ரசித்த, மதித்த  என் நாட்டின் ஜனநாயகமும், பன்முகத்தன்மையும் என் கண்முன்னே மங்க காண்கிறேன்.இந்தியாவின்  பன்முகத்தை பேரழகாக பார்த்த நிலை மாறி ஒற்றை அடையாளம்  கொடுப்பது பற்றி உள்துறை அமைச்சர் பேசக் கேட்கிறேன். இந்திய தாயின் கிரீடத்தை, மொழிகளெனும்  22 அழகிய வைரக் கற்கள் அலங்கரித்துக் கொண்டிருக்க,  அவற்றையெல்லாம்  எடுத்துவிட்டு ஒற்றை கல்லான இந்தியை மட்டும் அணிவித்தால்தான்,   இந்தியா ஒன்றுபடும் என்ற வலதுசாரிகளின் அடிப்படையற்ற  விருப்பங்களை அச்சத்தோடு கேட்கிறேன். மொழி மற்றும் கலாச்சார திணிப்பால் பிரிந்த நாடுகள்  பல, துயர சான்றுகளாக நம் கண்முன் இருக்கையில், ஒற்றுமையாய் இருக்கும்  என்  நாட்டில் ஒற்றை நாடு, ஒற்றை மதம், ஒற்றை கட்சி, ஒற்றை கலாச்சாரம்,  ஒற்றை மொழி,  ஒற்றை ரேசன் அட்டை, ஒற்றை பாடத்திட்டம், என்று பல, பல  ஒற்றைகளைக் கூறி சேர்ந்திருக்கும் மக்களை பிரித்தாள நினைக்கும் மதவாதிகளின்  ஒற்றை  கோஷத்தை வருத்தத்தோடும், கோபத்தோடும் கேட்கிறேன். எல்லாவற்றிலும்  ஒற்றையை விரும்பும் இந்த மத அடிப்படைவாதிகள்,  ஒற்றுமையாய்,   ஏற்றத்  தாழ்வுகளின்றி  வாழ்ந்த, இந்த மண்ணின்  மைந்தர்களிடம், பொய்யான  சாஸ்திரங்கள்  பல கூறி,  நான்கு வருண் சாதிகளாக அவர்களை ஏன் பிரித்தார்கள் என்ற பலத்த   ஐயப்பாடும் என்னுள் எழுந்தது.

என்  அச்சத்தையும், ஐயப்பாட்டையும் என் கல்லூரி நண்பர்களிடம்  பகிர முயன்றபோது,  காத்திருந்தது ஒரு பேரதிர்ச்சி. மதம் சார்ந்த, சமுக நலம் சார்ந்த விடையங்களை  அறிவு சார்  தளத்திலிருந்து விவாதித்த என் கல்லூரி நண்பர்கள் பலர் மத  அடிப்படைவாதிகளாக  மாறிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்தேன். என்  நண்பர்களோடு நான் பேசுகிறேனா, இல்லை சங்க பரிவாரங்களோடு பேசுகிறேனா?  என்று  எனக்கு குழப்பமாக இருந்தது. அமெரிக்க நிறுவனங்களில் நல்ல பதவியில்  இருக்கும்,  நன்கு படித்த என் நண்பர்களின் மனதில் இத்தகு மதவாத நஞ்சு  பரவியமைக்கான  காரணம் எனக்கு துளியும் புரிய வில்லை. மதவாத  நஞ்சின்  பிடியிலிருந்த  தப்பிய ஒரு நண்பரிடம், இவர்களின் இந்த பரிதாப நிலை  குறித்து  விசாரித்தேன். அந்நண்பர் என்னை பார்த்து கேட்டார், “ நீங்களும் புலனம் நண்பர்கள்  குழுவில் (WhatsApp group) இருக்கிறீர்களே, பின் ஏன் காரணத்தை என்னிடம்  கேட்கிறீர்கள்?” என்று எதிர் வினாவை அந்நண்பர் விடையாக கூறினார்.  குழப்பம்  மேலிட்ட  நிலையில், பொதுவாகவே WhatsApp  இல் வரும் வீடியோகளை  பார்க்காத  நான், என் நண்பர்களின் மதவாத நோயின் காரணம் அறிய எங்கள் குழுவில் பகிரப்பட்ட காணொளிகள்  அனைத்தையும் பார்த்தேன். நான் பார்த்த காணொளிகள்  பெரும்பாலும்,  மதவாத  கருத்துகளை பரப்பும், குறிப்பாக இளைஞர்களை மூளைச் சலவை செய்யும்  யுத்தியுடன் உருவாக்கப்பட்டிருந்தது.

  1. மென்மையான  மதவாதத்தை பரப்பும் காணொளிகள் பரவலாக இருந்தது.  இக்காணொளிகளை உடல் நலம் காக்கும் யோகாவை போதிக்கும் ஆசாமிகளும், சில  மத போதகர்களும் கூறுவது போல் தயாரித்து பரப்பி இருந்தனர். 
  2. முரட்டு  மதவாதத்தை நியாயப்படுத்தும் காணொளிகள் அதிகம் இருந்தது.  பொய்யான  தகவல்களை உண்மை போல் சித்தரித்தும்,  வரலாற்றின்  ஒரு பகுதியை  மட்டும் கூறி, தங்களுக்கு ஏற்றார் போல் ஆபத்தான வரலாற்றை  உருவாக்கியும்,தலைவர்களின் மேடை பேச்சில் சில வரிகளை மட்டும் வைத்து  எடிட்டிங்  செய்து, அந்த தலைவரின் கருத்துக்கு சிறிதும்  தொடர்பில்லாத  வீடியோக்களை  தயாரித்தும், இவ்வகை காணொளிகள் உருவாக்கப்பட்டு  பெருமளவில் பகிரப்பட்டிருந்தது. மதவாதம் சரி என்ற எண்ணத்தை காண்போர் மனங்களில்  பதிய வைக்கும் வேலையை இந்த காணொளிகள் சிறப்பாக  செய்தன.

இதில்  நகைச்சுவை என்னவெனில் பகிரப்பட்ட காணொளிகளில் 95 சதவிகிதம்  பொய்யானவைகள். ஆகவே என் பணி மிகவும் சுலபமாயிற்று. உண்மையான வரலாற்று  தரவுகளை  திரட்டினேன். அங்கீகரிக்கப்பட்ட அரசு இணையத்தில் இருந்து புள்ளி  விபரங்களையும்,  தகவல் அறியும் சட்டம் மூலம் என் நண்பர் உதவியுடன் சில  தகவல்களையும் திரட்டினேன். என் நண்பர்களை  அழைத்து, உரையாடல்  எதுவுமின்றி,  அனைத்து  தரவுகளையும் அவர்களிடம் கொடுத்தேன். முதலில் கோபம்  கொப்பளித்த  அவர்களின்  முகங்களில், ஆதாரங்களை பார்க்க பார்க்க முகங்கள் சுருங்க  ஆரம்பித்தது.  மதம் என்ற பெயரால்  தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதன் வலி அவர்களின் முகங்களில்  தெரிந்தது.  நான் சேகரித்த தரவுகள் அவர்களின் மதவாத நோய்க்கு  மருந்தானதை  கண்டு  எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. மதவாத நஞ்சு  அவர்களிடமிருந்து  நாளடைவில்  குறைய கண்டேன். மதங்கள் கடந்து விடையங்களை  அறிவு சார்  தளத்திலிருந்து  விவாதிக்கும், கேள்வி கேட்கும் என் நண்பர்கள்  விரைவில் முழுமையாக  குணமடைவார்கள் என்று நான் நம்புகிறேன்.

என்  நண்பர்களின் மதவாத நோயை, துவக்கத்திலேயே நான் அறிய உதவிய அவர்களின்  உளவியல் வெளிப்பாட்டு கேள்விகள் பின் வருபவைகள்.

  1. முஸ்லீம்கள்  பெரும்பாலும் இந்துக்களை மதிப்பதில்லை. குரான் அல்லாவை  நம்பாதவர்களை  கொல்ல சொல்கிறது, அதை பெரும்பாலும் அவர்கள்  தீவிரமாக  பின்பற்றுகின்றர்.
  2. கிறிஸ்துவர்கள்,  இந்து மக்களை மதம் மாற்றம்  செய்யவே இந்தியாவில் கல்வி  நிலையங்கள் நடத்துகின்றனர்.
  3. ஆர்எஸ்எஸ்  சாதியை ஒழிக்க அரும்பாடுபடுகிறது. ஆனால் பெரியார்  சாதியை  வளர்க்க பெரும் பாடுபட்டவர்.  சாதியே திராவிட கட்சிகளால் தான்  உருவானது.
  4. மெக்காலே  கல்வி முறை நம் நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும்  சீரழித்து விட்டது.
  5. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையே இட ஒதுக்கீடு தான்.
  6. நம் நாட்டின் பெருமையே மகாபாரதமும், ராமாயணமும் தான். பகவத் கீதையை நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.
  7. இந்தியாவை  இந்து ராஷ்டமாக அறிவிக்க வேண்டும். நாட்டின்  முன்னேற்றத்திற்காக இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்.
  8. பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும்.
  9. கம்யூனிசம் ஒரு தோற்று போன தத்துவம். அம்பேத்கர் கம்யூனிசத்தை எதிர்த்தார்.
  10. பெரியார்  ஒரு பிற்போக்குவாதி. அவர் தமிழை காட்டுமிராண்டி மொழி  என்றார். சுதந்திரம்  வேண்டாம் என்றார்.  அனைவரையும் ஆங்கிலம் பேச  சொன்னார். கடவுளை நம்புபவர்களை காட்டுமிராண்டி என்றார்.
  11. தொழில்  நிறுவனம் நடத்துவது அரசின் கடமை இல்லை. பொது துறைகளை  தனியாரிடன் கொடுத்துவிட்டால் நம் நாடு அமெரிக்கா போல் வளர்ந்து விடும்.
  12. பாபர் மசூதி இருந்த இடத்தில், குழந்தை ராமருக்கு கோவில் கட்ட வேண்டும்.
  13. இந்துக்களின்  பூணூலை பற்றி மட்டும் விமர்சிக்கும் திராவிட கட்சிகள், ஏன்  முஸ்லீம்களின்  தொப்பியை பற்றியோ, அல்லது கிறிஸ்துவர்களின்  சிலுவையைப் பற்றியோ விமர்சிப்பதில்லை.
  14. மோடி   இந்தியாவின் தந்தை. அவரை விமர்சிப்பவர்கள் தேச துரோகிகள்.  மோடியை எதிர்ப்பவர்கள் இந்து விரோதிகள்.

இவ்வாறான  சில கேள்விகளை திட்டமிட்ட ரோபோக்கள் போல மீண்டும் மீண்டும்  கேட்டு  கொண்டே இருப்பர் . இந்த அறிகுறிகள் உங்கள் உறவினரிடமோ,  நண்பர்களிடமோ  தென்பட்டால், உடனே செயல்பட்டு அவர்களை அந்நோயிலிருந்து  மீட்டெடுப்பதே,வீட்டிற்கும், நாட்டிற்கும் நாம் செய்ய வேண்டிய சேவை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எந்தவொரு  பொருள் குறித்து காணொளிகள் வாயிலாகவும்,  வாய்மொழி  வாயிலாகவும்,  எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை  ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமை, என்ற நம் வள்ளுவர்  பெருந்தகையின் குறளின்படி வாழ்வது மட்டுமே,மதவாத நோயிலிருந்து, நம்மை காத்துக்கொள்ளும் தடுப்பூசி.

என் நண்பர்கள் போல் இந்திய நாட்டில் பல படித்த இளைஞர்கள் மதவாத  நோயால்  தாக்கப்படும் அபாயம் உள்ளது. பரவி வரும் மதவாத நோய்க்கும், 
ஆபத்தான  வலதுசாரி  சித்தார்ந்தத்திற்க்கும் எதிரான நுண்ணுயிர் எதிரிகள் (Antibiotics) முற்போக்காளர்களின்  கையில்  உள்ள மார்க்சியமும், பெரியாரியமும்,  அம்பேத்கரியமும் மட்டுமே. 
இந்த  மாமேதைகளின் தத்துவங்களை உயர்த்தி பிடித்து, மதவாத விஷத்திலிருந்து நாட்டின்  பன்முகத்தன்மையையும்,  மக்களின் மதச்சார்பற்ற மாண்பையும் பாதுகாப்போம் என்று உறுதி ஏற்போம்.