tamilnadu

img

கனவுகள் சிதைந்த காட்டு ராஜாக்கள் - நா.வே.அருள்

லேக் லூயிஸ் இல் மறக்க முடியாத ஓர் அனுபவம் அங்கு முதல் நாட்டவர் ஒருவரைப் பார்த்ததுதான்.  முதல் குடிமகன்கள் குசைளவ சூயவiடிளே என்று அழைக்கப்படுகிற அவர்கள் தங்கள் இருப்புக்காகப் போராடிக்கொண்டிருப்பதாக அவர் எங்களிடம் சொன்னது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.  ஆனால் கனடா இன்னும் அவர்கள் மீது மென்மைப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகப் பலர் சொல்கிறார்கள். பேன்ஃப் தேசியப் பூங்கா பயணிகளின் கவனத்தைக் கவரும் ஒன்று என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.  கால்கரியிலிருந்து பேன்ஃப் வருவதற்கு ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஆனது.  வழி நெடுக மலைகளும் குன்றுகளும்.  மல்லாந்து கிடக்கும் மார்பகங்களாக குன்றுகள்.    மார்பகங்களிலிருந்து வழிந்து கிடக்கும் தாய்ப்பால் மாதிரி வெள்ளை வெளேரென்று மலையின் மேல் முகடுகளில் வெண்ணிற பனிப் பாளங்கள்.   பைன் மரங்களின் எல்லையில்லாத வரிசைகள்.  அங்கங்கும் பாய்ந்துகொண்டிருக்கும் தண்ணீர் அம்புகளாக ஆறுகள்.  பச்சைக் கம்பளங்கள்.  பள்ளத்தாக்குகள்.  சொர்க்கத்தின் நிறம் பச்சையாகத்தான் இருக்கவேண்டும்.

பேன்ஃப் நகரத்தின் டவுன் டவுனிலிருந்து லேக் லூயிஸ் வந்து சேர்ந்திருந்தோம்.  முன்னர் சொன்னது போல கனடா பிரிட்டிஷாரின் காலனி.  அதன் தாக்கம் இன்றளவும் நீடித்து வருகிறது.  1878 முதல் 1883 வரை கனடாவின் கவர்னராக இருந்தவர் மார்க்கஸ்.    லேக் லூயிஸ் என்கிற பெயர் அங்கிருக்கும் ஏரி ஒன்றுக்கு வைக்கப்பட்டுள்ளது.  இளவரசி லூயிஸ் கரோலின் அல்பெர்ட்டா மகாராணி விக்டோரியாவின் நான்காம் மகள்.  கனடா விடுதலையடையும் முன்பே லூயிஸ் இளவரசியின் கணவர் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்.  இந்த கிராமத்திற்கு லகன் என்கிற இன்னொரு பெயரும் உண்டு.  அந்த கிராமத்தின் மேற்குப் புறத்தில் 5 கி.மீ தொலைவில் உள்ளது ஏரி.  இது பனிப்பாளங்களால் ஆன ஏரி.  ஓர் ஆளைத் தூக்கிப் போட்டால் கொஞ்ச நேரத்திலேயே உறைந்துவிடுகிற அளவுக்கு அப்படியொரு குளிர்ச்சி.  இந்த ஏரியைச் சின்ன மீன்களின் ஏரி என்று பழங்குடியினர் அழைப்பார்கள்.  பனிப் பாளத்திலிருந்து உறைந்த நீர் வருவதால் நீலப்பச்சை ரத்தினக்கல் நிறத்தில் நீர் இருக்கும்.  முக்கால் கி.மீ பரப்பளவு கொண்டது இந்த ஏரி.  இந்த ஏரியிலிருந்துதான் லூயிஸ் அருவி மூன்று கி.மீ தூரத்திற்குச் சென்று போவ் ஆற்றில் கலக்கிறது.

லூயிஸ் ஏரியின் பின்புறத்தில் மூன்று மலைகள்.  டெம்பிள் மவுண்ட், மவுண்ட் ஒயிட், மவுண்ட் நிப்லாக்.  இந்த ஏரியின் பின்புறத்தில் மிகப் பெரிய திரைச்சீலையாக இயற்கை வரைந்து வைத்திருக்கும்.  அந்த மலைகளின் மீது நமது கனவுகள் பனிப்பாளங்கள் போல உறைந்துபோயிருக்கும்.  n ஜஸ்பர் பூங்கா, பினப் பூங்காவிற்கு இடையில் லூயிஸ் ஏரி அமைந்திருக்கிறது.  ஏரியில் நீர் உறைந்தில்லாதபோது படகு சவாரி அனுமதிக்கிறார்கள்.  குளிர் காலத்தில் பனிச்சறுக்கு விளையாடுவார்களாம்.  ஏனெனில் குளிர் காலத்தில் மைனஸ் நாற்பது டிகிரி செல்சியஸ் வரைக்கும் குளிரடிக்குமாம். ஜேம்ஸ் காடி, ஹட்சன் பே கம்பெனியின் டேவிட் தாம்ஸன் என்பவர்கள்தான் முதல் முதலாக போவ் ஆற்றைப் பார்த்த ஐரோப்பியர்கள்.  கி.பி 1787 – 88 வாக்கில் பழங்குடிமக்கள்தான் வாழ்ந்தவர்கள்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடி மக்கள் அங்கு குடியேறியிருந்தார்கள். நகோடா, சூ டினா, பிளாக் புட் கான்படரேசி என்றறியப்பட்ட கெய்னை, பில்கானெய், சிக்சிகா பழங்குடிமக்கள் போவ் ஆற்றங்கரைகளில் வசித்து வந்தார்கள்.

பழங்குடி இன மக்கள் காட்டெருமைகளை மலை உச்சிகளுக்கு அல்லது சமவெளிகளில் துரத்தி வில் அம்புகள் கொண்டு வேட்டையாடுவார்கள். நகோடா இன மக்கள் மீன் பிடிப்புத் தொழிலும் செய்தனர். பெண்கள் வேர்கள், விதைகள், பழங்கள் முதலானவற்றைச் சேகரிப்பார்கள்.   தாம்ஸனின் பயணத்தை முன்வைத்து ஏராளமான ஐரோப்பியர்கள் தோல் வாணிபத்திற்காக போவ் ஆற்றை நோக்கிப் பயணமானார்கள்.  காட்டெருமைகளின் எண்ணிக்கையும் குறைந்து போனது.  ஐரோப்பியர்கள் இவர்களிடம் விஸ்கியை அறிமுகப்படுத்தியதில் நோய்களுக்கு ஆளானார்கள். இப்படித்தான் பழங்குடிகளின் நசிவு ஆரம்பமானது.  ஐரோப்பியர்களின் எண்ணிக்கை அதிகரித்து.    1870 களில் விஸ்கி வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது.1877 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் நாள் ஒப்பந்தம் 7 கையெழுத்தானது.  இதன்படி போவ் ஆற்றையொட்டி சில பகுதிகளை மட்டும் பழங்குடியினர் வைத்துக்கொண்டு ஏராளமான நிலப் பகுதிகளை  ஐரோப்பியர்களுக்கு விட்டுக் கொடுத்தனர்.  

நமக்கு மலரும் நினைவுகளைப்போலத் தோன்றுகிறது.  நம் நாட்டில் கிழக்கிந்தியக் கம்பெனி என்றால், கனடாவில் ஹட்சன் பே கம்பெனி.  வாணிபம் வழியாக வந்து அரசியலைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள்.  இருநூறு ஆண்டுகளை இழந்துதான் மீண்டும் நம் நாட்டைப் பெற முடிந்தது.  ஆனால் கனடா நாட்டு முதல் குடிமகன்கள் – பழங்குடி மக்கள்.அவர்கள் தற்போது  – எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறார்கள்.     நாங்கள் லூயிஸ் ஏரியில் பார்த்த அந்த முதல் குடிமகனுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டோம்.  அவரது பிம்பம் கரையும் கனவினைப் போன்று தோற்றமளித்தது.  இந்தக் காட்டின் ராஜா இன்று வாழ்க்கைக்காக இப்படி வெளிநாட்டு மனிதர்களிடம் டாலர்களுக்காகக் கையேந்திக் கொண்டிருக்கிறார். நானும் அருள்பாரதியும் கைக்குலுக்கிக் கொண்டோம்.  ஒளிப்படம் எடுத்துக் கொண்டோம்.  இது மாபெரும் மானுடப் பாடம். வரலாற்றைப் புரிந்துகொள்ளாவிட்டால், நிச்சயம் வரலாறு நம்மைத் தண்டித்துவிடும். கனடா ஓரளவுக்கு தாராளவாத நாடாக இருந்தாலும் இன்னும் அங்கே முதல் நாட்டவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற விவரம் முதல் முதலாக கனடா நாட்டின் வரலாற்றைச் சுருக்கமாகவேனும் அறிய வேண்டிய ஆர்வத்தை ஏற்படுத்தியது.

-பயணிப்போம்