மாஸ்கோ
14 கோடி மக்கள் தொகையுடன் குளிர்ந்த வானிலை கொண்ட ரஷ்யா நாடு கொரோனாவால் கடுமையாகத் திணறி வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை .
தினமும் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் ஐரோப்பாவின் கொரோனா மையமாக உருவெடுத்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 99 ஆயிரத்து 941 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 115 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 837 ஆக உயர்ந்துள்ளது. 76 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். உலகின் கொரோனா பாதிப்பு அட்டவணையில் ரஷ்யா குறுகிய காலத்தில் பலத்த சேதாரத்தை சந்தித்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.