மாட்ரிட்
உலகில் கொரோனா வைரஸ் எழுச்சி பெற்ற காலத்தில் அதிக சேதாரத்தை சந்தித்த ஐரோப்பா நாடான ஸ்பெயினில் மே மூன்றாம் வாரத்தில் கொரோனா பரவல் மந்தமாகியது. பச்சை மண்டலம் பெறவில்லை என்றாலும் தினசரி பாதிப்பு 200-300க்குள் இருந்தது. இதனால் அந்நாட்டு மக்கள் வழக்கம் போல இயல்பு நிலைக்கு திரும்பி தங்களது வேலையை தொடங்கினர்.
இந்நிலையில் ஜூலை 2-ஆம் வாரத்திலிருந்து கொரோனா வைரஸ் தனது 2-ஆம் கட்ட ஆட்டத்தை தொடங்கியது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் 1,361 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 3.05 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் 3 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 28 ஆயிரத்து 416 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்கள், குணமடைந்தவர்களின் விபரத்தை அந்நாட்டு அரசு ரகசியமாக வைத்துள்ளது. ஸ்பெயின் மட்டுமின்றி பிரிட்டன், பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தனது 2-ஆம் கட்ட ஆட்டத்தை தொடங்கியுள்ளது.