tamilnadu

img

ஊரடங்கிலும் அடங்காத கட்டண கொள்ளை... -- சுபாஷ்

 "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே

என்று  அதிவீரராமபாண்டியர் பாடியுள்ளார்.

இன்று உண்மையில் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக பெற்றோர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.  கொரோனா தொற்றால்  உலகமே நிலைகுலைந்திருக்கிறது. 4 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளும் ,1930க்குப் பிறகு மிகப்பெரிய பொருளாதார மந்த நிலையும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் 85 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிருஸ்டாலினா ஜார்ஜிவா மார்ச் மாதத்திலேயே தெரிவித்திருந்தார் .

ஜூன் மாத உலக வங்கியின் ஆய்வின் படி 71மில்லியன் மக்கள் அதிதீவிர வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும், 100 மில்லியன் மக்கள் தீவிர வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் 400மில்லியன் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 4.1மில்லியன் இளைஞர்கள் இந்தியாவில் வேலை இழந்துள்ளதாக சர்வதேசிய தொழிலாளர் கழகம் கூறுகிறது. கொரோனாதொற்று முடிவுக்கு வரும்போது உலகிலுள்ள பாதி மக்கள் தொகை ஏழைகளாக தள்ளப்படுவார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன..

குறிப்பாக தினசரி கூலி,சுயதொழில் , சிறு , குறு தொழில்வியாபாரிகள்,  விவசாயிகள் போன்ற சேமிப்பில்லா தொழிலாளர்கள் வேலையில்லாமல் அன்றாடம் ஒன்று அல்லது இரு வேளை உணவே உட்கொள்கின்றனர். இந்த நிலையில்தான் 2020-21 ஆம்  கல்வி ஆண்டு துவங்கியுள்ளது. இப்போதுதான் தேர்வு, ஆன்லைன் வகுப்புகள் என குழப்பங்கள் ஓரளவு அடங்கியுள்ள நிலையில் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணத்தை கட்டுமாறு பெற்றோர்களை நச்சரிக்கும் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஊரடங்கு காலத்தில்  கல்வி கட்டணத்தை மூன்று தவணையாக 40% மட்டும்தான் வசூல்செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் தனியார் பள்ளிகள் மதிக்கவில்லை. இது இன்று நேற்றல்ல கல்வியில் தனியார்மயம் தொடங்கிய காலம் தொட்டே அரசை மதிக்காமல் தனி ராஜாங்கத்தையே தனியார் முதலாளிகள் நடத்திவருகின்றனர். பல பள்ளிகள் முழு கட்டணத்தை செழுத்தினால்தான் புத்தகம் தருவோம், ஆன்லைன் வகுப்பில் அனுமதிப்போம் என்பதெல்லாம் ஆணவத்தின் உச்சம். 

இந்திய கல்வியும், தனியார்மயமும்;

 பிரிட்டிஷ் இந்தியாவில் 1813 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்வி சாசனம் தான் முதன்முதலில் குருகுல கல்வி முறையை ஒழித்து பள்ளிக் கல்விக்கு வித்திட்டது. அதன்பின்பு பலரால் பல மாற்றங்கள் கல்வியில் உருவாக்கப்பட்டது. குறிப்பாக 1837 இல் "உடலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயராகவும் இருக்கவேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மெக்காலே கல்வி முறையே இன்று வரை தொடர்கிறது. அவருக்குப்பின், 1882ல் வில்லியம் ஹண்டர் என்பவரால் இப்போதுள்ள தேர்வு முறை முதன்முதலில் தொடங்கப்பட்டது. 1937ஆம் ஆண்டு தான் காங்கிரஸ் தலைமையில் வார்தாவில் நடந்த கல்வி மாநாட்டில் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அடிப்படை இலவச கல்வி வழங்க வேண்டும் என்று தீர்மானம் முன்மொழியப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு 70 ஆண்டுக்குப் பின்புதான் அந்த தீர்மானம் சட்டமாக நிறை வேற்றப்பட்டது.

 1950 அரசியலமைப்பு சட்டப்படி கல்வியானது மாநிலப் பட்டியலில் இருந்தது. ஆனால், 1976ம் ஆண்டு 42வது சட்ட திருத்தத்தின்படி அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதுமுதல் கல்வியில் அதிகார குவிப்பு துவங்கியது. பிரிட்டிஷ் இந்தியா காலத்திலேயே தனியார் பள்ளிகள் ஆங்காங்கே சுயநிதி ஆங்கிலவழி கல்வி நிறுவனங்களாக செயல்பட்டன. குறிப்பாக தமிழகத்தில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் 29 பள்ளிகளும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் மூன்று பள்ளிகளும் என இயங்கிவந்தன.  1970களில் தான் இந்த முறை தளர்த்தப்பட்டு தனியார் பள்ளி முதலாளிகளுக்கான தனி அமைப்பு உருவாக்கப்பட்டு அந்த அமைப்பின்பால் புது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்பு 1980களில் அது இந்தியா முழுமைக்கும் பரவியது. 1990 பிறகு உலகமயமாக்கல் கொள்கையின் தாக்கத்தால் கல்வியிலும் தனியார்மயம் தழைத்தோங்கியது. "கல்வியை உலக சந்தையின் விற்பனை பொருளாக்க" உலக வங்கியும் ஐ.நாவும் இணைந்து நடத்திய "எல்லோருக்குமான கல்வி" உலக மாநாட்டில் வெளியிடப்பட்ட "ஜோமிதியின் பிரகடனம்" மூலம் கல்வி விற்பனை பொருளாக அறிவிக்கப்பட்டது.

 உலக வர்த்தக நிறுவனம் மற்றும் உலக வங்கியின் கடன் நிபந்தனைகளில் முக்கியமான பங்கு வகிப்பது கல்விக்கான மானியங்களை ரத்து செய்தல் மற்றும் கல்வியில் கட்டற்ற அந்நிய மூலதனத்தை தங்கு தடையின்றி இயங்க விடுதல் தான். இதன் மூலம் இந்திய முதலாளிகளும், அன்னிய முதலாளிகளும் இந்திய கல்வித்துறையை பணம் கொழிக்கும் சந்தையாக கருதி தனியார் கல்வி நிலையங்களை காட்டாறு வேகத்தில் துவங்கினர்.

1996 -இல் 10 சதவீதமாக இருந்த தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று 43.18%(2015-16) ஆக உள்ளது. இந்தியா முழுமைக்கும் 260  மில்லியன் பள்ளி மாணவர்களும், 1.3 மில்லியன் பள்ளிகளும் உள்ளது. 37.4 மில்லியன் உயர்கல்வியியல் மாணவர்களும், 993 பல்கலைகழகங்கள், 39,953 கல்லூரிகளும் உள்ளன. இதில் தனியார் பள்ளிகளில் 29%  மாணவர்கள் பயில்கின்றனர். அதாவது 70.9 மில்லியன் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். 43% உயர் கல்வித் துறையில் தனியார் கல்வி நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. 80% தனியார் தொழிற்கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதுமட்டுமன்றி 11வது திட்ட கமிஷனில் அரசு-தனியார் கூட்டு (ppp)  என்ற திட்டத்தை கல்வியில் புகுத்த முன்மொழியப்பட்டது. அதனடிப்படையில் நாடு முழுவதும் 2500 பள்ளிகளை திறப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்படி 40% மாணவர்களை அரசும்(இலவசமாக), 60% மாணவர்களை தனியாரும்(கட்டணம் எவ்வளவு வேண்டுமானாலும்) சேர்த்து கொள்ளலாம். பள்ளியின் செலவினங்களுக்கு ஆண்டுதோறும் 25% அரசு பங்களிப்பு செய்யும். 

தமிழ்நாட்டில் இன்னும் இந்த திட்டம் அதிகம் அமுல்படுத்தப்படவில்லையென்றாலும் நாடு முழுவதும் ஆங்காங்கே இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட தமிழக அரசின் யார் வேண்டுமானாலும் விருப்பமானவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுக்கலாம் என்ற அறிவிப்பு இதன் ஒரு பகுதியே ஆகும். ஆனால் இந்திய மாணவர் சங்கம், ஆசிரியர் சங்கங்களின் போராட்டங்களால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டது. இருப்பினும் பள்ளிக்கு வண்ணம் பூசுகிறோம், உதவி செய்கிறோம் என்ற பெயரில் பள்ளி நிர்வாகத்தை தனிநபர் கையகப்படுத்தும் செயலும் ஆங்காங்கே நிகழ்ந்தவண்ணம் உள்ளது.  இப்படியாக , தொடர்ந்து தனியார்மயம் கல்வியில் விரவிக் கிடக்கிறது.  சேவை துறையான கல்வியை சந்தை பண்டமாக மாற்றியதன் விளைவாக பெரு மற்றும் சிறு முதலாளிகளின் வியாபாரப் பொருளாக மாறியது கல்வி. எனவேதான், இந்த பேரிடர் காலத்திலும் பெற்றோர்களிடம் வட்டிக்காரனை போல் பணம் பிடுங்க முயற்சிக்கிறார்கள் கல்வி நிறுவன முதலாளிகள். மனமுடைந்த பெற்றோர்களின் நம்பிக்கையற்ற குரல்கள் பின்வருமாறு... 

சென்னையை சேர்ந்த சலூன் கடைக்காரர் ராஜா என்பவர் தன்னுடைய இரு குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படிப்பதாகவும், இந்த காலத்தில் ஊரடங்கால் இரு மாதமாக கடைகள் அடைக்கப்பட்டு வருமானம் இன்றி தவிப்பதாகவும் கல்விக் கட்டணத்தை கட்ட இயலாது  என்றும் கூறுகிறார். பள்ளி நிர்வாகத்திடம்  கால அவகாசம் கேட்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று கூறுகிறார்.

  கோவையை சேர்ந்த சங்கீதா என்ற இரண்டாவது படிக்கும் மாணவனின் பெற்றோர்  முதல் தவணை கட்டணமாக 30,000 செலுத்தியுள்ளார் அதுவும் செலுத்தவில்லை என்றால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது என்ற பள்ளி நிர்வாகத்தின் கட்டாயத்தின் பேரில் கட்டணத்தை கட்டியதாக கூறுகிறார்

சென்னையை சேர்ந்த அரி என்ற மாணவர் கூறுவதாவது, என்னுடைய தந்தை டையாலிஷஸ் நோயாளி. தாய் கிடையாது. இந்த நேரத்தில் வருமானமும் இல்லாததால் ஊரடங்கிற்கு பிறகு கல்வி கட்டணம் செலுத்தமுடியாததால் படிப்பை தொடர்வதே கடினம் என்றார். இதுதான் இந்தியாவின் பல்வேறு மாணவர்களின் கண்ணோட்டமாகும்

இப்படி நாடு முழுவதும் மறைமுகமாகவும், நேரடியாகவும் கட்டாயத்தின் பேரில் பெற்றோர்களிடம் கட்டண வசூல் வேட்டையை துவங்கியுள்ளது தனியார் கல்வி நிறுவனங்கள்

 பாதகங்கள்  :

பொதுவாகவே கல்வியில் தனியார்மயம்  இந்தியாவில் சந்தை போட்டியை  ஊக்குவிப்பதாகவும் , மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி வலியது பிழைத்துக் கொள்ளும்(survival of fittest) என்ற கருத்தை நிலைநாட்டவும் செய்துள்ளது. சேவை பட்டியலில் இருக்க வேண்டிய கல்வியை விலை பொருளாக மாற்றி காய்கறிகளை போல சந்தையில் விற்று கொண்டிருக்கிறது. லட்சம் லட்சமாக பணம் கட்டி பயிலும் மாணவர்கள் எப்படி சேவை மனப்பான்மையுடன்  வளருவார்கள்? என்பது கேள்விக்குறியே.

இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணங்களை ஒழுங்குபடுத்த மாநில வாரியாகவும், தேசிய அளவிலும் கமிட்டிகள் உள்ளபோதும் அவை கார்ப்பரேட்டுகளின்  கைப்பாவையாகவே உள்ளனர். பெரும்பான்மையான கல்விநிறுவனங்கள் பெற்றோரின் ரத்தத்தை கட்டணமாக உறிஞ்சுகின்றன. இது போதாது என்று  இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கை 2020ன்  படி  தனியார் பல்கலைக்கழகங்கள்  தங்கள் கட்டணத்தை தானே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவை கூட மதிக்காமல் பல கல்வி நிறுவனங்கள் முழு கட்டணத்தை வசூலித்து கொண்டிருக்கின்றனர். ஊரடங்கு முடிந்தபிறகும் கூட வேலையின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். பல குழந்தைகள் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் இடைநிற்றல் செய்யும் பேராபத்து உள்ளது. அதுமட்டுமின்றி தன் நண்பர்கள் கல்வி நிலையத்திற்கு செல்லும் போது கட்டணம் கட்டாததால் தான் மட்டும் போக முடியவில்லையே என்ற உணர்ச்சி ஏழை மாணவர்களிடம் உளவியல் ரீதியான பிரச்சனைகளை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளது.அது மட்டுமின்றி அவசர அவசரமாக பத்தாம் வகுப்பு முடிவுகளை அறிவித்துவிட்டு பதினோறாம் வகுப்பு சேர்க்கையை அரசு பள்ளிகளில் நடத்தாமல் காலம் தாழ்த்துவது திட்டமிட்டு பெற்றோர்களை தனியாரை நோக்கி ஓட செய்யும் செயலாகும். 

மாற்றமே தீர்வு :

கொரோனா காலத்தை பயன்படுத்தி நாட்டின் பொதுதுறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் செயலை செய்துகொண்டிருக்கிறது பிஜேபி அரசு. ஏற்கனவே,பாதிக்குப் பாதி கல்வியில் தனியார்மயம் தாண்டவமாடும் நிலையில்  கல்வி கொடுக்கும் கடமையிலிருந்து முழுவதுமாக வெளியேறும் செயலை அரசு செய்கிறது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் அந்நிய மூலதனத்தை நேரடியாக கல்வியில் புகுத்தும் செயலை செய்துள்ளது மோடி அரசு. முதலில் இதுபோன்ற செயல்களை விடுத்து கொரோனா பேரிடர் முடிந்து பொருளாதார நிலைமைகள் கட்டுக்குள் வரும் வரை கல்வி இலவசமாக அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து விதமான கல்விக் கட்டணங்களும் நிலைமை சரியாகும் வரை ரத்து செய்யப்பட வேண்டும்.  மாணவர்களின் கல்விக் கடன்களை அரசே ஏற்க வேண்டும். ஊக்கத் தொகைகளை காலம் தாழ்த்தாமல்  ஒப்படைக்க வேண்டும். கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும். ஏனெனில் கல்வியில் சிறந்து விளங்கும் பின்லாந்து , கியூபா போன்ற நாடுகளில் எல்லாம் கல்வி என்பது அரசால் இலவசமாக கொடுக்கப்படும் சேவை பட்டியலில் உள்ளது.

 "சேவை நோக்கில் வழங்கப்படும் கல்வி தான் நல்ல மனிதர்களை உருவாக்கும் , ஆனால் விற்பனை செய்யப்படும் கல்வியோ வியாபாரிகளை உருவாக்கும்" என்பதை உணர்ந்து ஆளும் அரசுகள் கல்வியை இலவசமாகவும் ,சமமாகவும், அறிவியல்பூர்வமாகவும் வழங்க வேண்டும்.  பல நாடுகள் தங்கள் GDPயில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்குகின்றன.

53.7 லட்சம் மக்கள் தொகை உள்ள நார்வே 6.4% ஜிடிபி யை கல்விக்காக ஒதுக்குகிறது. ஆனால் 138 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியா 3% மட்டுமே கல்விக்கு ஒதுக்குவது வேதனைக்குறியது. எனவே,  இந்த காலத்தை இந்திய அரசு தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள பயன்படுத்த வேண்டும். எல்லா  பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்று விட்டு கல்விக்கும், காற்றுக்கும், நீருக்கும் காசு கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகாமல் இருக்க நாட்டின் வளங்களை அடிப்படை தேவைகளை அரசுடைமை ஆக்குவது அவசரமான அடிப்படைத் தேவை என்பதை அரசு உணர வேண்டும்.

-- சுபாஷ்

( SFI  தென் சென்னை மாவட்ட தலைவர் )