tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சிபிஐ அறிக்கை தாக்கல்

சென்னை, ஆக.27- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு திங்களன்று(ஆக.26) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.  இந்நிலையில், வழக்கு செவ்வாயன்று(ஆக.27)மீண்டும் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக சிபிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகவும், இதில் அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே காவல்துறை பதிவு செய்த 207 வழக்குகள் சிபிஐ.க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், கலவரத்தில் போராட்டக்காரர்களின் பங்கு, காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் செயல்பாடு குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சிபிஐ கூறியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனைகள், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடமிருந்து ஆவணங்கள்பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், சிசிடிவி பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. விசாரணை குறித்த அறிக்கையை வரும் 16ஆம் தேதி தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளதாகவும், அந்த உத்தரவு நிறை வேற்றப்படும் என்றும் சிபிஐ தெரி வித்துள்ளது.  ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை நிலவரம் குறித்த விவரங்களை பிற்பகல் தாக்கல் செய்வதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.