சென்னை,நவ.5- சென்னை காரப்பாக்கத்தில், காதல் திருமணம் செய்த இளைஞர் தேநீர் கடை அருகே மர்மநபரால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் முரளி. தனியார் மருந்து விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவரும், அதே குடியிருப்பில் வசிக்கும் கவுசல்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், கவுசல்யாவின் பெற்றோர் முரளியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து கடந்த இரு மாதங்களுக்கு முன் முரளியும், கவுசல்யாவும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இதுதொடர்பாக இரு வீட்டார் இடையே பிரச்சனை ஏற்படவே சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் வைத்து பேசி தீர்வு காணப்பட்டது. இதற்கிடையே அண்மையில் கவுசல்யாவின் பெற்றோர் மனம் மாறி முரளியை ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாயன்று(நவ.5) வழக்கம் போல் வேலைக்குச் சென்ற முரளி காரப்பாக்கத்தில் தனது அலுவலகத்திற்கு எதிரே இருக்கும் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர், தனியாக பேச வேண்டும் என்று கூறி முரளியை அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. பேசிக் கொண்டிருந்த போதே தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த மர்மநபர் கண்ணிமைக்கும் நேரத்தில் முரளி யின் கழுத்தை அறுத்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாகச் கூறப்படுகிறது. கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சரிந்த முரளியை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அங்கு கொண்டு செல்வதற்குள்ளாக முரளி உயிரிழந்து விட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கண்ணகி நகர் போலீசார் கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளி குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.