மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதால் தண்ணீர் பிரச்னையை தனியார் பள்ளிகளே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மேலும் தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், தண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் சத்தியமங்கலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது ;
மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதால் தண்ணீர் பிரச்னையை தனியார் பள்ளிகளே தீர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் இல்லை என்று பள்ளியை மூடினால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். குடிநீர் தட்டுப்பாடு உள்ள பள்ளிகள் உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து பள்ளிகள் செயல்படுவதற்கான நடவடிக்கையை பள்ளி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.