சென்னை,ஜன.13- பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர்விடுத்துள்ள அறிக்கை வருமாறு; தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் பொங்கலையொட்டி ஆண்டுதோறும் புத்தகச் சந்தை நடத்தப்படுகிறது. பலதரப்பட்ட நூல்கள் விற்பனையாகின்றன. இந்த ஆண்டு செய்தி மய்யத்தின் (அரங்கு எண் 101) சார்பில் வைக்கப் பட்டுள்ள அரங்கில், ‘‘அரசுக்கு எதிரான நூல்கள்'' இடம்பெற் றன என்று கூறி அந்தக் கடையை காலி செய்ய வைத்ததுடன், அதன் உரிமையாளரும், பத்திரிகையாளருமான அன்பழ கனை காவல்துறை கைது செய்திருப்பது எந்த வகையில் சட்டப்படியோ - நியாயப்படியோ சரியானது?
அரசாங்கத்தின் இந்தத் தவறான நடவடிக்கைக்கும், அணுகுமுறைக்கும் ‘‘பபாசி'' எப்படி துணை போனது? முறைப்படி கட்டணம் செலுத்தி அனுமதி பெற்றுதான் அரங்கு அமைக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட நூல்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படுவதைப் புரிந்துகொள்ள முடியும். ‘அரசை எதிர்க்கும் நூல்கள் இடம்பெறக்கூடாது' என்பது எப்படி சரியானதும் - சட்டப்படியானதும் ஆகும்? அரசுகளை விமர்சிக்கும் நூல்களே இடம்பெறக்கூடாது என்றால், இது அரசியல் சட்ட ஜீவாதார உரிமைக்கு, பத்திரிகை, புத்தகக் கருத்துச் சுதந்திர பரவலுக்கு எதிரானதல்லவா? இதுபோல் நாளை பல நூல்களையும் விற்பனை செய்வதும் தடுக்கப்பட லாமே! இது எழுத்துரிமைக்கும், கருத்துரிமைக்கும் எதிரானது அல்லவா. தமிழ்நாடு அரசின் செயல்பாடும், அதற்கு துணை போகும் பபாசியின் அணுகுமுறையும் கண்ட னத்துக்குரியதாகும். அரசு மறுபரிசீலனை செய்யட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.